பேச்சுவார்த்தை சக்ஸஸ்… சிரித்த முகத்துடன் வெளியே வந்த கமல் ; ஏமாற்றத்தில் ம.நீ.ம நிர்வாகிகள்..!!

Author: Babu Lakshmanan
9 March 2024, 2:15 pm

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சி திமுக கூட்டணி கட்சிகளை தக்க வைக்கவும், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கவும் பல்வேறு முயற்சிகளையும், பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றன.

திமுகவை பொறுத்தவரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு மீண்டும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு இழுபறியில் இருந்து வந்தது. மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கோவை, தென்சென்னை என இரு தொகுதிகளை கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு திமுக உடன்படவில்லை என்று தெரிகிறது. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

2 தொகுதிகளில் கேட்டு வரும் நிலையில், ஒரு தொகுதியையாவது மக்கள் நீதி மய்யம் கேட்டு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் மட்டுமே ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு கமல்ஹாசனும் ஒப்புக்கொண்ட நிலையில், இருதரப்பினரிடையே கையெழுத்தாகியுள்ளது.

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல், “நாடாளுமன்ற தேர்தலில் ம.நீ.ம. போட்டியிடவில்லை ; கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்,” என தெரிவித்தார். இது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடையே ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 249

    0

    0