ஓசியில் ஜாங்கிரி கேட்டு தராததால் ஆத்திரம்… சிப்ஸ் கடை ஊழியரை புரட்டி எடுத்த போதை ஆசாமிகள் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Babu Lakshmanan11 March 2024, 6:59 pm
தூத்துக்குடியில் சிப்ஸ் கடையில்ஜாங்கிரி தராததால் மதுபோதையில் இருந்த இரண்டு நபர்கள் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வீஇ ரோட்டில் நாகர்கோவிலைச் சேர்ந்த முருகன் என்பவர் ஸ்ரீ சிந்து என்ற பெயரில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தூத்துக்குடி அருகே உள்ள பழைய காயல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த கடை அருகே அரசு மதுபான கடை ஒன்று செயல்படுகிறது.
இதனால், அங்கு மது அருந்திவிட்டு வரும் குண்டர்கள் அவ்வப்போது, இந்த சிப்ஸ் கடைக்கு சென்று பணம் கொடுக்காமல், கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் சிப்ஸ் மற்றும் இனிப்பு வகைகளை கேட்டு தொந்தரவு செய்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு அதே போன்று அரசு மதுபான கடையில் மது அருந்திவிட்டு, மது போதை தலைக்கேறிய நிலையில் வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள், சிப்ஸ் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர் குமாரிடம் சென்று, பணம் கொடுக்காமல் ஜாங்கிரி கேட்டுள்ளனர். அதற்கு குமார் பணம் இல்லாமல் ஜாங்கிரி கொடுக்க முடியாது, உரிமையாளர் திட்டுவார் என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, போதையில் இருந்த நான்கு பேரும் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். கடையை விட்டு வெளியே வந்தால் அடித்து துவைத்து விடுவதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து குமார் எதற்காக என்னை திட்டினீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த போதை ஆசாமிகளில் இரண்டு நபர்கள் கடைக்குள் புகுந்து, ஊழியர் குமாரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த வியாபாரிகள் சிலர் உடனடியாக வந்து ஊழியர் குமாரை, மதுபோதையில் இருந்த நபர்களிடம் இருந்து காப்பாற்றினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காயம் அடைந்த ஊழியர் குமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊழியர் குமார் மற்றும் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் ஆகியோர் தென்பாகம் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய மது போதை கும்பலை கைது செய்ய கோரி புகார் அளித்துள்ளனர்.
தூத்துக்குடியில் மது போதையில் இருந்த கும்பல் ஜாங்கிரி தராததால் கடை ஊழியரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,