தேர்தல் பத்திரம் விவகாரத்தை திசைதிருப்ப நாடகமா..? CAA-வுக்கு கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
12 March 2024, 11:29 am

பொதுத் தேர்தல் அறிவிப்புக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு ஏற்கனவே கடும் எதிர்ப்புக்கு ஆளான ஒரு சட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பது சிறந்த ஜனநாயக மரபு ஆகாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு ஜூன் மாதம் வரையிலும் எஸ்.பி.ஐ வங்கி கேட்ட அவகாச காலத்தை நிராகரித்து நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், இன்று மாலைக்குள் தங்களிடம் இருக்கின்ற அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும் எனவும்; அதை தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் 15 ஆம் தேதிக்குள் வெளியிடவும் தீர்க்கமாக உத்தரவிட்டு விட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கிடப்பில் கிடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முதல் நாடெங்கும் அமலுக்கு வரும் என்று பிரதமரே அறிவித்துள்ளார்; குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்பட்ட போது நாடெங்கும் உள்ள ஒரு குறிப்பிட்ட மத பிரிவினருக்கும், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏறக்குறைய அந்த சட்டம் காலாவதியாகிவிட்ட நிலையிலேயே இருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தேர்தல் பத்திர தீர்ப்பு நாடெங்கும் பெரும் பேசு பொருளாக மாறிவிடும்; இந்த தகவல்கள் பொதுவெளிக்கு வரும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டம் நேற்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பொதுத் தேர்தல் அறிவிப்புக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு ஏற்கனவே கடும் எதிர்ப்புக்கு ஆளான ஒரு சட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பது சிறந்த ஜனநாயக மரபு ஆகாது.

இந்த சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்த நேரம் ஜனநாயகவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாததும் விமர்சனத்திற்கு ஆளாக கூடியதுமாகும். பெரிய அளவிற்கு யாருக்கும் பலனளிக்காத, ஏறக்குறைய காலாவதியான குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவித்து இருப்பது, “தேர்தல் பத்திர விவகாரம் பூதாகரமாக கிளம்பி விடுமோ என்ற மத்திய அரசின் பெரும் பீதி மற்றும் தேர்தல் கணக்கு” என்றே கருதப்படும்.! இது ஜனநாயக நெறிமுறை அல்ல, என தெரிவித்துள்ளார்.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 219

    0

    0