சொன்ன தேதியில், சொன்ன நேரத்தில்.. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு.. தேர்தல் பத்திர விபரங்களை கொடுத்த எஸ்பிஐ!
Author: Udayachandran RadhaKrishnan12 March 2024, 7:28 pm
சொன்ன தேதியில், சொன்ன நேரத்தில்.. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு.. தேர்தல் பத்திர விபரங்களை கொடுத்த எஸ்பிஐ!
கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்குவதை தடை செய்து உத்தரவிட்டது. மேலும், ஏப்ரல் 2019 முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை அடுத்து அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் வெளியிட கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ரிட் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், இன்று மாலைக்குள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அனைத்து தேர்தல் பத்திர விவரங்களையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த உத்தரவை செயல்படுத்த தவறினால் ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றம் எச்சரிக்கைக்கு கீழ்படிந்துள்ளது எஸ்பிஐ வங்கி. நேற்று வரை தேர்தல் பத்திர விவரங்களை வழங்க 100 நாட்களுக்கு மேல் அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து 30 மணி நேரத்திற்குள் விவரங்களை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.