ஒரு குடும்பத்தினரிடம் அதிகாரம்… அடிமைப் போல நடத்தப்படும் திமுகவினர் ; பிரதமர் மோடி அப்படியல்ல ; வானதி சீனிவாசம் பெருமிதம்!!

Author: Babu Lakshmanan
14 March 2024, 7:33 pm

கனிமொழியின் தந்தையாரும் தமையனார் செய்யாததை பிரதமர் மோடி செய்து கொண்டிருக்கிறார் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “கோவையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் பாரத பிரதமரை தரக்குறைவாக விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விட தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொடுத்துள்ளது.

அதிகமாக 11 மருத்துவ கல்லூரிகள் தென்மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இரட்டை ரயில் பாதை திட்டம், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் போன்ற பல திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோடிக்கு எதிர்ப்பலையை உருவாக்கி 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் பெற்று தரவில்லை.

2019ல் மோடிக்கு எதிராக ஓர் எதிர்பலையை உருவாக்கி அதன் வாயிலாக 38 எம்பிக்களை பெற்று தமிழகத்திற்க்கு எந்த திட்டங்களையும் செய்யவில்லை என்றாலும் நாங்கள் 38 எம்பிக்களை ஜெயித்தோம் என்ற காரணத்திற்காக வைத்திருந்தார்கள். இந்த முறை அப்படி ஒரு மோடி எதிர்ப்பை உருவாக்குவதற்கு முயற்சி செய்கிறார் முதல்வர். அவருடைய முயற்சி ஒருபோதும் வெற்றி பெறப்போவது கிடையாது.

நாளை நாகர்கோவிலுக்கு முதல்வர் வருகிறார். பிரதமர் என்கின்றவர் நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு எப்படி சுற்றுப்பயணம் செல்கிறார் என்பதை அவரை பார்த்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகாரத்தை ஓர் இடத்தில் வைத்து குவித்துக் கொண்டு, ஒரு குடும்பத்திடம் வைத்துக் கொண்டு அத்தனை பேரையும் அடிமை போல் நடத்தாமல் ஜனநாயக ரீதியில் இந்த நாட்டை நடத்திக் கொண்டிருப்பவராக பிரதமர் மோடி இருக்கிறார்

தமிழகத்தில் பிரதமர் மோடியின் வருகை ஓவ்வொரு முறையும் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்துகிறது. போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் தமிழகத்தின் முதல் குடும்பத்துடன் எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதை தான் பார்க்க வேண்டும், எவ்வளவு உதவிகளை அவர் செய்திருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். முதல்வர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகம் பெண்களுக்கு எதிராக அதிகம் குற்றம் நடக்கும் மாநிலமாக மாறி வருகிறது.

பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தமிழகம் என்பது போதை கலாச்சாரத்திற்கும், பெண்களுக்கு எதிரான மாநிலம் ஆகவும் மாறி வருகிறது. இதைத்தான் அவர்கள் திராவிட மாடல் என்று கூறி வருகிறார்கள். எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் உண்மையை உலகிற்கு சொல்வதில் பாஜக தயங்காது. அதற்காக எந்தவித நடவடிக்கை வந்தாலும், அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

நடிகை குஷ்பு தமிழ் மொழியை இவ்வளவு தூரம் பேசுவது சிறப்பு. சில சமயம் அவரது தாய்மொழி வேறு என்பதாலும், கத்துக் கொண்ட மொழி வேறு என்பதாலும் அவர் சொல்லக்கூடிய அர்த்தத்தை தான் பார்க்க வேண்டுமே தவிர, சொல்லக்கூடிய வார்த்தைகளை வைத்துக் கொண்டு, அவர்களை குறை சொல்வது சரியல்ல. தமிழ் மொழியை தமிழ் கலாச்சாரத்தை தமிழனுடைய பெருமை எல்லாம் உலகம் முழுவதும் எடுத்துச் செல்கின்ற மிகச்சிறந்த தமிழராக பிரதமர் மோடி அவர்கள் இருக்கின்றார்.

அதனால், கனிமொழியின் தந்தையார் செய்யாததை, கனிமொழியின் தமையனார் செய்யாததை பிரதமர் மோடி செய்து கொண்டிருக்கிறார். பிரதமர் எப்போதும் தமிழர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார் . பிரதமர் அவ்வப்போது தமிழகம் வருகின்ற பொழுது திமுகவினருக்கு அப்போது தான் தமிழை பற்றி தெரிகிறது. கூட்டணியை பொறுத்தவரை எந்த ரகசியமும் கிடையாது, வெளிப்படையாக நடைபெற்று வருகிறது என்றார்.

  • Ajith Kumar Vidamuyarchi movie விடாமுயற்சி படத்தில் ட்விஸ்ட்…அஜித்துடன் இணைந்த பிரபல நடிகை..படக்குழு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!
  • Views: - 244

    0

    0