பிரதமர் மோடி வருகை… குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு ; பூம்புகார் படகு போக்குவரத்தும் நிறுத்தம்
Author: Babu Lakshmanan15 March 2024, 11:42 am
கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரத பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 2024 பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து இன்று துவங்க இருக்கிறார். இதற்காக கன்னியாகுமரியில் மிகப்பெரிய பொதுக்கூட்டமேடை அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இதற்காக 3000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக கூட்டணி தலைவர்கள், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், சுதகார் ரெட்டி, மத்திய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், நயினார் நாகேந்திரன், ஜான் பாண்டியன், வானதி சீனிவாசன், எம்ஆர் காந்தி அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
பொதுவாக தமிழகத்தை குறிவைத்து மோடி அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தென் மாநிலங்களில் அதிகப்படியான இடங்களை கைப்பற்றும் நோக்கில் ஏற்கனவே நெல்லை பல்லடம் சென்னை போன்ற இடங்களுக்கு வருகை தந்திருந்தார்.
தற்போது கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளார் இந்நிலையில் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்டுத்தப்பட்டுள்ளது.
மேலும், அங்கு வாழை தோரணங்கள்,கொடிகம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது அதேபோன்று பாதுகாப்பு கருதி கன்னியாகுமரியில் கடைகள் அடைக்கப்பட்டு காணப்படுகிறது. மேலும், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்வதற்கு மதியம் இரண்டு மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது மீனவர்களும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர மத்திய குழுமம் இதனை தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி, சின்னமூட்டம், ஆரோக்கியபுரம், வாவா துறை, புது கிராமம், சிலுவை நகர், கோவளம் ஆகிய ஏழு கடற்கரை சார்ந்தவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் விழா கோலம் கொண்டுள்ளது.