‘தமிழ் தெம்பு’ திருவிழாவால் விழா கோலம் பூண்ட ஈஷா… 17-ம் தேதி ரேக்ளா பந்தயமும் நடைபெறும்
Author: Babu Lakshmanan15 March 2024, 12:06 pm
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா போட்டி) கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 17-ம் தேதி முதல்முறையாக நடைபெற உள்ளது. மேலும், விவசாயிகள் பயன் பெறும் விதமாக மார்ச் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நாட்டு மாட்டு சந்தையும் நடைபெற உள்ளது.
ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று கலந்து உருவான பழம்பெரும் நாகரீகம் நம் தமிழ் நாகரீகம். பக்தியும், பகுத்தறிவும் கொண்ட தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடி மகிழும் விதமாக ‘தமிழ் தெம்பு’ என்னும் பண்பாட்டு திருவிழாவை ஈஷா ஏற்பாடு செய்துள்ளது.
மார்ச் 9-ம் தேதி தொடங்கிய இத்திருவிழாவால் ஈஷா விழா கோலம் பூண்டுள்ளது. ஆதியோகி முன்பு நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
நாட்டுப்புற கலைகளை கண்டு ரசிக்கும் விதமாக மாலை 6 மணிக்கு பறையாட்டம், சலங்கை ஆட்டம், தேவராட்டம், தஞ்சாவூர் தவில், கரக்காட்டம் போன்ற பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் மற்றும் பல்லவ மன்னர்களின் சிறப்புகள், பக்திக்கும், கட்டிட கலைக்கும் உதாரணமாக திகழும் தமிழ் கோவில்கள், ராமனுஜரில் தொடங்கி வ.உ.சி, முத்துராமலிங்க தேவர், காமராசர் தொட்டு அப்துல் கலாம் வரை தமிழ் சமூகத்திற்கு பங்காற்றிய பெருந்தலைவர்களின் குறிப்புகள், பக்தியால் தமிழ் வளர்த்த நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் சிறப்புகள் உட்பட பல்வேறு விஷயங்களை படித்து தெரிந்த கொள்ள உதவும் கண்காட்சியும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
இது தவிர, பாரத தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் நாட்டு மாட்டு இனங்களை ஒரே இடத்தில் கண்டு வியக்கும் வகையில், நாட்டு மாட்டு கண்காட்சி, தமிழ் மருத்துவ முறைகளை அறிந்து கொள்ள உதவும் சித்த மருத்துவ குடில், ஆரோக்கியமான உணவுகளை உண்டு மகிழ பாரம்பரிய உணவுகளின் அரங்குகள், குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ ராட்டினங்கள், குதிரை சவாரி போன்ற பல்வேறு அம்சங்கள் இத்திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் விதமாக நாட்டு மாட்டு சந்தை மார்ச் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாட்டு மாட்டு இனங்களை வாங்கவும் விற்கவும் முடியும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 84280 38212 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல், தமிழ் தெம்பு என்ற தலைப்பில் பெண்களுக்காக சிறப்பு கோலப்போட்டி மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் மூன்று அணிகளுக்கு முறையே ரூ.33,000, ரூ.22,000, ரூ.11,000 பரிசாக வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 94425 10429, 82481 28349 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.