அரசியல் கட்சிகள் நிதி பெறக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது : தேர்தல் பத்திரம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2024, 10:00 pm

அரசியல் கட்சிகள் நிதி பெறக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது : தேர்தல் பத்திரம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!!

உச்சநீதிமன்றம் உத்தரவின்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. அதில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2024 பிப்ரவரி 15-ந்தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்கள், நிதியை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பெறப்பட்ட தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு பல நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நிதி அளித்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், இது தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது,”அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு தனியார் நிறுவனங்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆளுங்கட்சிக்கு நிதி அளித்தார்கள் என்பது ஒரு அனுமானம் மட்டுமே. அவர்கள் பா.ஜ.க.வுக்கு மட்டுமே நிதி அளித்தார்கள் என்று உங்களால் கூற முடியுமா?

அமலாக்கத்துறை விசாரணைக்கும் ஆளுங்கட்சி பெற்ற தேர்தல் நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் கட்சிகள் நிதி பெறக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. தனியார் நிறுவனங்கள் நிதி வழங்குவதற்கு தயாராக இருக்கும்போது, அதற்கேற்ற சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததில் இருந்து சில பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தேர்தல் நிதி தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்படும்போது, கடந்த காலத்தில் கிடைத்த பாடங்களை கொண்டு வெளிப்படைத்தன்மையுடன் புதிய நடைமுறைகளை உருவாக்க முடியும் என கூறினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…