ஆட்டம் காட்டும் பாமக- தேமுதிக?… அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2024, 9:10 pm

ஆட்டம் காட்டும் பாமக- தேமுதிக?… அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள்!

நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி, சட்டப்பேரவை தேர்தல் என்றாலும் சரி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளிடம் அதனுடன் இணைய விரும்பும் கட்சிகள் கூடுதல் சீட் கேட்டு பேரம் பேசுவது, எல்லா மாநிலங்களிலும் சர்வ சாதாரணமாக காணப்படும் ஒன்றுதான். ஆனால் அதற்கும் ஒரு எல்லை எப்போதுமே உண்டு.

ஏனென்றால் சில நேரம் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் எரிச்சலையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தி தேர்தல் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடும் எண்ணத்தில் அது முட்டுக்கட்டையையும் போட்டுவிடும்.

இது போன்றதொரு இடியாப்ப சிக்கலில்தான் வட மாவட்டங்களில் ஐந்து சதவீத வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாமகவும், மாநிலம் முழுவதும் பரவலாக இரண்டு சதவீதத்துக்கும் குறையாத ஓட்டுகளை வைத்திருக்கும் தேமுதிகவும் ஒரே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடனும், தேசிய கட்சியான பாஜகவுடனும் கூட்டணி பேச்சு வார்த்தையில் கடந்த இரண்டு வாரங்களாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு கண்ணாமூச்சு ஆட்டம்
காட்டி வருகின்றன.

முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை நேரடியாக சந்தித்தபோது அக்கட்சிக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாகவும் விரைவில் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இரு கட்சிகளும் கையெழுத்திடும் என்றும் தகவல் வெளியானது.

இந்தப் பேச்சுவார்த்தையும் கூட பாமகவின் பொதுக்குழு நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி சேர கட்சியின் தொண்டர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்ற செய்தி வெளியான நிலையில்தான் அதிமுக தரப்பில் டாக்டர் ராமதாசுடன் நடத்தப்பட்டது.

ஆனால் அவருடைய மகனும், பாமக தலைவருமான டாக்டர் அன்புமணி
அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று உடனடியாக மறுத்தார்.

அதேநேரம் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அவர் டெல்லி சென்று கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. அப்போது நீங்கள் கேட்கிற பத்து நாடாளுமன்ற தொகுதிகளையும் உங்களுக்கு தருகிறோம், பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் மத்திய அமைச்சர் பதவியோ, ராஜ்யசபா எம்பி சீட்டோ எதிர்பார்க்காதீர்கள். சென்னைக்கு வரும் பாஜகவின் தேசிய மேலிட பொறுப்பாளர்களிடமே கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தலாம் இதற்காக நீங்கள் டெல்லிக்கு வரத் தேவையில்லை என்று கூறிவிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதற்கு அன்புமணி தரப்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அதேசமயம் மறைந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா வீட்டிற்கு அதிமுக தலைவர்கள் நேரடியாக சென்று பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். அப்போது தேமுதிக தரப்பில், ஒரு ராஜ்யசபா எம் பி சீட்டும், நான்கு நாடாளுமன்ற தொகுதிகளும் தங்களுக்கு ஒதுக்கி தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதே நேரம் கள்ளக்குறிச்சி, கடலூர் தொகுதிகளை பாமகவும் தேமுதிகவும் கேட்டதால் இதை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் அதிமுக திண்டாட்டத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில் சென்னையில் தேசிய பாஜக மேலிட பொறுப்பாளர்களை இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் டாக்டர் அன்புமணி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியதாகவும் அப்போது பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை அவர் உறுதி செய்ததாகவும் செய்தி வெளியானது.

இந்த பரபரப்பான சூழலில்தான் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 15ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் அந்த கூட்டம் கடைசி நேரத்தில் திடீரென தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.

ஏற்கனவே பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னையில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுவில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

மார்ச் 15ம் தேதி கூட்டத்திலும் பாமகவின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் 2026 தமிழக தேர்தலை முன்னிட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதுதான் சிறந்ததாக இருக்கும் என்று வலியுறுத்தினால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதல் போக்கு மேலும் அதிகரித்து விடும் என்ற நிலையில்தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

என்றபோதிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் விரும்புவதாகவும், இல்லை இல்லை நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் அதனால் மோடியின் தலைமையிலான பாஜகவை நாம் ஆதரிப்பதுதான் நல்லது என்று அன்புமணி உறுதியுடன் கூறுவதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி பரவி
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால்தான் பாஜகவுடன் டாக்டர் அன்புமணி கூட்டணி சேர விரும்பினாலும், முடிவெடுக்கும் அதிகாரம் தந்தையின் கைகளில் இருப்பதால் இதுவரை அக் கட்சியுடன் அதிகாரப் பூர்வ தொகுதி பங்கீடு பேச்சு நடக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மார்ச் 15ம் தேதி அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்து தேமுதிக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.தேமுதிக தலைவர்கள் இது தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவிப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் தொகுதி பங்கீடு பேச்சு மார்ச் 15 ம் தேதி நடக்காது என்று தேமுதிக அறிவித்துவிட்டது. இதனால் அதிமுக தலைவர்கள் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். எனினும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிடும் என்கிறார்கள்.

என்றபோதிலும் இன்னொரு பக்கம் தேமுதிக தரப்பில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க திரை மறைவு பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.

“இது தமிழக அரசியலில் ஒரு சில கட்சிகளிடம் நிச்சயமற்ற தன்மை இருப்பதையே காட்டுகிறது. தவிர இது மக்களிடம் பல்வேறு யூகங்களை கிளப்பி விடுவதற்கு காரணமாகவும் அமைந்துவிட்டது” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“அதிமுகவோ, பாஜகவோ யாருடன் கூட்டணி அமைக்க பாமகவும், தேமுதிகவும் விரும்புகின்றன என்பது இதுவரை மதில் மேல் பூனை போல் உள்ளது. டாக்டர் அன்புமணி பாஜகவுடன்தான் கூட்டணி என்று கூறுவதற்கு காரணம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அவர் வடமாநிலங்களில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முறைகேடாக அனுமதி வழங்கியதாக 2008ம் ஆண்டு சிபிஐயால் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரிக்கப் படாமல் அப்படியே கிடப்பில் உள்ளது.

அதை ED கையில் எடுத்து விரைவில் விசாரணையை தொடங்க நேரிடும் என்று டெல்லி பாஜக தலைவர்களில் சிலர் மிரட்டுவதாக கூறப்படும் நெருக்கடியான நிலையில்தான் டாக்டர் அன்புமணி அக் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார் என்று ஒரு பக்கம் செய்தி காட்டுத் தீயாய் பரவி வருகிறது. இதை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தான் தெரியவில்லை.

இன்னொரு பக்கம், தேமுதிகவோ அதிமுக, பாஜக இரு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே அளவுக்கு அதிகமான ஸ்வீட் பாக்ஸ்களை எதிர்பார்ப்பதாகவும் யார் வெய்ட்டாக தருகிறார்கள் என்பதை பொருத்து கூட்டணி அமைக்க தீர்மானித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது போல் வேகமாக பரவும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது பாமக,தேமுதிக கட்சிகளின் பொறுப்பாகும்.

யார் பக்கம் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதை கணித்து கூட்டணி அமைப்பதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் கூட்டணி சேர்வதற்கான கதவுகள் இருபக்கமும் திறந்திருப்பதால் அதையே காரணமாக வைத்து பேச்சுவார்த்தையை இழுத்துக் கொண்டே போய் கண்ணாமூச்சு ஆடுவது இரு கட்சிகளுக்கும் அழகல்ல.

விரைவில் ஒரு தெளிவான முடிவை எடுக்காவிட்டால் தமிழக மக்களிடம் இந்த இரு கட்சிகள் மீதான நம்பகத்தன்மை குறைந்து கொண்டே போகும். இது தேர்தல் நாளன்று தொண்டர்களிடம் தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலையையும் ஏற்படுத்திவிடும். வெற்றியோ, தோல்வியோ ஒரு உறுதியான முடிவை பாமகவும், தேமுதிகவும் உடனடியாக எடுப்பதுதான் நல்லது. நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையிலும் கூட்டணி பேச்சு வார்த்தையை இழுத்துக் கொண்டே போவது நல்ல விஷயமாகவும் தெரியவில்லை” என்று அந்த அரசியல் நோக்கர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பாமகவும், தேமுதிகவும் விரைவில் கூட்டணியை உறுதி செய்யுமா?… அல்லது இழுபறி நிலையை நீட்டிக்குமா? என்பது உண்மையிலேயே சிக்கலான கேள்விதான்!

  • Swasika Talk About act with Lubber Pandhu 10 வருடம் வாய்ப்பில்லாமல் தவித்த நடிகை.. இயக்குநர் கெஞ்சியதால் நடித்த படம் BLOCKBUSTER!
  • Views: - 175

    0

    0