திருச்சி தொகுதி யாருக்கு? முதலமைச்சர் ஸ்டாலின் – ராகுல் இடையே இன்று பேச்சு? நாளை வெளியாகும் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2024, 11:02 am

திருச்சி தொகுதி யாருக்கு? முதலமைச்சர் ஸ்டாலின் – ராகுல் இடையே இன்று பேச்சு? நாளை வெளியாகும் அறிவிப்பு!

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகள் என்று உடன்பாடு காண்பதில் இன்று வரை இழுபறி நிலை நீடிக்கிறது.

இதில் காங்கிரசுக்கு புதுச்சேரி ஒதுக்கப்பட்டுவிட்டது. கடந்த முறை போல் திருச்சி, விருதுநகர், ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், சிவகங்கை, தேனி ஆகிய 9 தொகுதிகளை காங்கிரஸ் முதலில் கேட்டு இருந்தது.

ஆனால் திருச்சி, விருதுநகர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என்று கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் திருச்சி அல்லது விருதுநகர் தொகுதியை கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க தி.மு.க. முடிவு செய்தது. ஆனால் இதற்கு காங்கிரஸ் ஒத்துக்கொள்ளவில்லை.

ஆனாலும் தி.மு.க. புதிதாக 2 தொகுதிகளை ஒதுக்குவதாக கூறியது. அந்த புதிய தொகுதியில் சம்பந்தப்பட்ட எம்.பி.யை போட்டியிட சொல்லுங்கள் என்று கூறியிருந்தனர்.

இதற்கு அந்த முக்கிய பிரமுகர் சம்மதிக்கவில்லை. இதனால் அவர் டெல்லியில் மேலிட தலைவர்களிடம் முறையிட்டுள்ளார். இந்த விஷயம் இப்போது ராகுல் காந்தி வரை சென்றுவிட்டது.

இந்த நிலையில் இன்று மும்பை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை சந்திக்கும் போது திருச்சி, விருதுநகர் தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை பேசி முடிவு செய்வார் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் அறிவாலயத்தில் நாளை காலை தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று முடிவு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகும் என தெரிகிறது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!