விருப்பம் இல்லாமல் அரசியலுக்குள் வந்தேன்… இப்போ சீட்டை கொடுத்துட்டாங்க… வாரிசு அரசியலைப் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை ; துரை வைகோ

Author: Babu Lakshmanan
18 March 2024, 8:57 pm

திராவிட கட்சிகள் ஒட்டுமொத்தமாக பாஜகவை எதிர்ப்பதாகவும், பாஜக ஒரு அரசியல் தீண்டத்தகாதவர்கள் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜீன ராஜ் தலைமையில் மதிமுகவின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நிறைவடைந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அடையாளம் காணப்பட்டு கையெழுத்தானது.

மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்ற நிர்வாக கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது :- மதிமுக சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி. அப்படி இல்லையென்றால் ஒதுக்கப்பட்ட பொது சின்னத்தில் போட்டியிடுவோம்.

எங்கள் வேட்பாளரை வெற்றி பெற திமுகவினர் பாடுபடுவார்கள். திருச்சி திமுகவின் கோட்டை. தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற நாங்களும் பாடுபடுவோம். ஆட்சி மன்ற குழுவில் ஒருமனதாக முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட வேண்டும் என தெரிவித்தார்கள். திமுகவின் பலம் தான் எங்கள் பலம்.

மோடி இன்னும் பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் சரி, தமிழகத்தில் இடம் இல்லை. மேரா பாரத் மேரா பரிவார் என கத்தி கொண்டே மட்டும் தான் இருக்கிறார் மோடி. பிட் பாக்கெட் போன்ற வழக்குகளில் இருப்பவர்களை தான் பிஜேபியில் சேர்க்கிறார்கள், என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறியதாவது :- தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற எங்கள் இயக்க தோழர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். கூட்டத்தில் ஒருமனதாக நான் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத பாஜகவிற்கு வாய்ப்பு அளித்துவிட கூடாது.

கடந்த 9 ஆண்டுகளில் பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா…? இல்லை. ஐந்து மாநில தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார்கள். அத்தியாவசிய விலை உயர்வுக்கு காரணம் பெட்ரோல் டீசல் விலையே காரணம். அதற்கு காரணம் மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு. பாஜக தேர்தல் பரப்புரையில் சொன்னது என்ன, செய்தது என்ன என்பது குறித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன்.

திராவிட கட்சிகள் ஒட்டுமொத்தமாக பாஜகவை எதிர்க்கிறார்கள். பாஜக ஒரு அரசியல் தீண்டத்தகாதவர்கள். தேர்தலுக்கு பின்பு அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேராது என்பது என்ன நிச்சயம். வாரிசு அரசியல் குறித்து பேச பாஜகவிற்கு அருகதை கிடையாது. பாஜகவில் பல மூத்த தலைவர்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறார்கள். ஒன்றிய அரசு ED, வருமானவரித்துறை, சிபிஐ உள்ளிட்டவைகளை அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுமா போன்ற கேள்விகள் உள்ளது.

புதுமைப்பெண் திட்டம், 9 லட்சத்திற்கும் மேலான முதலீடுகளை ஈர்த்து, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கி சிறப்பான திட்டங்களை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழக முதல்வர் கொண்டு வந்திருக்கிறார்கள். ஈவிஎம் இயந்திரங்கள் மூலம் தவறுகள் நடக்கலாம். ஈவிஎம் இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடைபெறுவதை பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்க்கிறது.

தனக்கு விருப்பம் இல்லாமல் தான் அரசியலுக்கு வந்ததாகவும், தற்பொழுது தன்னை தேடி ஒரு பொறுப்பு வந்ததை எப்படி நிராகரிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் அனைவரும் நான்தான் வேட்பாளராக இருக்க வேண்டும் என கூறினார்கள். அதன் அடிப்படையில் தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிகள் நான் போட்டியிட இருக்கிறேன், என தெரிவித்தார்.

  • Amaran Movie Rs 308 Crore Collection அமரன் வசூல் வேட்டையில் செம்ம வேகம்: சிவகார்த்திகேயனின் மாஸ் சாதனை
  • Views: - 229

    0

    0