திமுகவின் பொய்புரட்டுகளுக்கு எதிராக நல்லதளம் அமைத்த கோவை மக்கள் ; தேர்தலில் தக்க பதிலடி ; அமைச்சர் எல்.முருகன்..!!

Author: Babu Lakshmanan
18 March 2024, 10:04 pm

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொய் புரட்டுகளுக்கு எதிராக நல்லதொரு தளத்தை கோவை மாநகர மக்கள் அமைத்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை சாய்பாபா காலனியில் இருந்து துவங்கிய, ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, மக்களை நோக்கி கையசைத்தப்படி காரில் சென்றார். ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் திறந்தவெளி வாகனத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடியை வரவேற்க சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்திருந்தனர். சாலையின் இருபுறமும், கூடிய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடியை மலர்தூவி வரவேற்றனர். இந்த ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி வடகோவை, டி.பி.ரோடு வழியாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை 2.5 கி.மீ., தூரம் நடைபெற்றது.

பின்னர், 1998ம் ஆண்டு நிகழ்ந்த கோவை குண்டுவெடிப்பில் பலியானோரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, ரேஸ்கோர்சில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் இன்று தங்குகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :- தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 பாராளுமன்றத் தொகுதிகளையும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களின் தலைமையிலான பாஜக கட்சி கைப்பற்றும் என்பதே நிதர்சனம். இந்த உண்மையறிந்தே, கோவை பேரணியில் ஒன்றிணைந்த மக்கள் வெள்ளமானது இன்று கரைபுரண்டோடியது.

தங்களின் குடும்ப நலனுக்காகவும், பத்தாண்டு காலமாய் கொள்ளையடிக்க இயலாத வறட்சியுடன், மீண்டும் ஊழலில் ஊறித் திளைப்பதற்காகவும் கூட்டணி அமைத்துள்ள, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொய் புரட்டுகளுக்கு எதிராக நல்லதொரு தளம் அமைத்துள்ள கோவை மாநகர மக்கள், தேர்தல் நாளன்று மிகச் சரியான பாடமும் புகட்டுவார்கள். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்கள், வரலாற்றில் இல்லாத வகையில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றியுடன், மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதில், எள்ளளவும் ஐயமில்லை.

“மீண்டும் மோடி, வேண்டும் மோடி-2024!!”, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 222

    0

    0