பைக்கில் சென்ற இளைஞர் தலை சிதைத்து கொடூரக் கொலை.. இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு.. போலீசார் குவிப்பு..!!

Author: Babu Lakshmanan
21 March 2024, 5:51 pm

மயிலாடுதுறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மற்றொரு பிரிவினர் வாழும் பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்றதால் பரபரப்பு நிலவியது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார். இவரது உறவினர் சரவணன் ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது, மர்மகும்பலால் அஜித் குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வெட்டு காயங்களுடன் சரவணன் உயிர்த்தப்பினார்.


படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன் கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் உறவினர்கள் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி மீனா, மாவட்ட ஆட்சியர் திரு மகாபாரதி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மற்றொரு பிரிவு மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர்.

இதன் காரணமாக இரு பிரிவினர் இடையே ஜாதி மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். மயிலாடுதுறையில் தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து, கடைகளை மூடச் சொல்லி பாதிக்கப்பட்டவர்கள் தகராறு செய்ததால் கடைகள் அடைக்கப்பட்டு பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே தாங்கள் போராட்டங்களை கைவிட போவதாக கூறி வருகின்றனர்.

  • Aishwarya Rajinikanth upcoming project ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!