மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கிறார் பொன்முடி.. உச்சநீதிமன்றம் கொடுத்த குட்டு… உடனே அழைப்பு விடுத்த ஆளுநர்.!!
Author: Babu Lakshmanan22 March 2024, 1:36 pm
அமைச்சராக பதவியேற்க வருமாறு பொன்முடிக்கு ஆளுநர் ஆர்என் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்தகால திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் பொன்முடியின் மீதான தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து பொன்முடி மீண்டும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்திருக்கிறார் என்பது உறுதியாகிறது.
இதையடுத்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவியேற்க வைக்கும் நோக்கில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கடிதம் எழுதியிருந்தார். பொன்முடியை அமைச்சராக்க முடியாது எனத் ஆளுநர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆளுநர் பதவி பிரமாணம் செய்ய மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு ஆளுநர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு தெரிகிறதா..?, பதவி பிரமாணம் செய்து வைப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என ஆளுநர் எப்படி கூற முடியும்..?, உச்சநீதிமன்ற தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுக்கிறாரா..?
இந்த பிரச்சனையை தீவிரமாக எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்பதை ஆளுநரிடம் கூறுங்கள். அரசின் மீது குற்றம்சாட்டி தனது சட்ட விதிமீறல் நடத்தையை சரியென வாதிட ஆளுநர் முயற்சி செய்கிறாரா..?, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் பதிலளிக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், அமைச்சராக பதவியேற்க வருமாறு பொன்முடிக்கு ஆளுநர் ஆர்என் ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் இன்று கெடு விதித்திருந்த நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அமைச்சராக பொறுப்பேற்கிறார் பொன்முடி. அவருக்கு மீண்டும் உயர்கல்வித்துறையே ஒதுக்கீடு செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.