தமிழகத்தில் மோடியே தேர்தலில் நின்றாலும் வெற்றி பெற முடியாது : அதுக்கு வாய்ப்பே இல்ல.. அடித்து கூறும் அமைச்சர் ஐ.பெரியசாமி!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2024, 5:09 pm

தமிழகத்தில் மோடியே தேர்தலில் நின்றாலும் வெற்றி பெற முடியாது : அதுக்கு வாய்ப்பே இல்ல.. அடித்து கூறும் அமைச்சர் ஐ.பெரியசாமி!

பழனியில் திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி; சுதந்திரத்திற்கு பிறகு பத்தாண்டு காலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக ஆட்சி நடந்தது என்றால் அது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி தான், மக்களுக்காக ஆட்சி நடக்கவில்லை கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக ஆட்சி நடத்தினார்கள்.

தேர்தல் பத்திரம் மூலமாக 6000 கோடியை பாரதிய ஜனதா கட்சி பெற்று உள்ளது. இந்த நிதி எப்படி வந்தது இதற்கெல்லாம் பதில் கிடைக்கக்கூடிய நாளாக தேர்தல் முடிவு வரக் கூடிய நாள் இருக்க வேண்டும்.

100 நாள் வேலைத்திட்டத்தை முடக்கக் கூடிய வேலையில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் பேரூராட்சிகளுக்கும் நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியசாமி ; தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வெற்றிக்கு காரணம் மூன்று ஆண்டு காலத்தில் தளபதி ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு தேர்தலில் கூறிய 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

திமுக தலைமையிலான கூட்டணி அரசியல் கூட்டணி என்றும், எதிராக உள்ளவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ளனர் என விமர்சனம் செய்தார்.

மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோல்வி பயத்தால் கைது செய்துள்ளனர். டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை தழுவும் என தெரிவித்தார். பொன்முடி மீண்டும் அமைச்சராக இன்று பதவி ஏற்க உள்ளார். சூது கொஞ்ச நாள் கவ்வி இருந்தது தற்போது அது விலகத் துவங்கியுள்ளது. சூது கவ்வும் பின்பு தர்மம் வெல்லும் என்பதைப் போல் மீண்டும் பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்கிறார் என தெரிவித்தார்.

மேலும் கோவையில் அண்ணாமலை போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கோவையில் அண்ணாமலை மட்டுமல்ல மோடியே போட்டியிட்டாலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என உறுதியாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 249

    0

    0