சௌமியா அன்புமணிக்கு தேர்தலில் சீட்டு ஏன்..? இதுதான் பாமகவின் சமூக நீதி ; ராமதாஸ் கொடுத்த விளக்கம்…!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 12:53 pm

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ததில் உண்மையான சமூக நீதியை பாமக பின்பற்றியதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- பா.ம.க. வேட்பாளர்களில் 30% மகளிர்; 20 விழுக்காட்டினர் பட்டியலினம்; இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி!

2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் ( காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான் மகளிருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.

தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. அதனால் தான் சொல்கிறோம் பாட்டாளி மக்கள் கட்சி தான் சமூகநீதிக் கட்சி என்று!

அதேபோல். பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20% பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. இது தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தை விட அதிகம் ஆகும். இது தான் பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.

இதற்கு முன் 1999 மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட போதே சிதம்பரம், இராசிபுரம் ஆகிய இரு தொகுதிகளை, அதாவது 28.70% தொகுதிகளை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கிய வரலாறு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி!, என தெரிவித்துள்ளார்.

  • Ethirneechal Serial Fans are shocked and stop to watch என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!