அரசியலில் நான் கதிர் ஆனந்த்தின் ஜுனியர்… வேலூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி பேச்சு..!!
Author: Babu Lakshmanan26 March 2024, 10:04 pm
அரசியலில் மட்டுமல்ல கல்லூரியிலும் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் ஜுனியர் நான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்து விட்டு, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
தற்போது அவர் வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது :- நான் கதிர் ஆனந்த் அவர்களின் ஜூனியர். பள்ளி கல்லூரிகள் மட்டுமல்ல, அரசியலிலும் நான் அவருக்கு ஜூனியர். எனவே நான் ஒரு அமைச்சராகவோ, எம்எல்ஏ ஆக வோ, இளைஞர் அணி தலைவராகவோ இங்கு வாக்கு கேட்க வரவில்லை. கதிர் ஆனந்தின் நண்பராக வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
கடந்த முறை வேலூர் தொகுதி மக்கள் மிகவும் சோதித்து விட்டீர்கள். மற்ற தொகுதிகளில் எல்லாம் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைத்த நிலையில். வேலூரில் மட்டும் வெறும் 8000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. ஆனால். இந்த முறை 2 லட்சம் அல்லது 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கதிர் ஆனந்த் எதிராக நிற்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் டெபாசிட் இழக்க வேண்டும். அந்த அளவுக்கு நீங்கள் வாக்குகளை அவருக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் ஐபிஎல் போட்டியும் அதிமுகவும் ஒன்றுதான். ஐபிஎல் போட்டியில் சென்னை, பெங்களூர், மும்பை, குஜராத், கொல்கத்தா போன்ற அணிகள் இருப்பது போலவே அதிமுகவிலும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, மோடி அணி, சசிகலா அணி, டிடிவி தினகரன் அணி, ஜெ தீபா அணி, தீபாவின் டிரைவர் அணி என பல அணிகள் உள்ளன. எனவே அந்த அணிகளுக்கு வாக்களித்து உங்கள் ஓட்டுக்களை வீணாக்காமல், திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள், எனக் கூறினார்.