சின்னம் கிடைக்காமல் போனதுக்கு பாஜகதான் காரணம்.. திமுக-வை எங்களிடம் இருந்து பிரிக்க முயற்சி ; துரை வைகோ குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan28 March 2024, 9:21 am
பாஜக அழுத்தத்தின் காரணமாகவே பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனது என்று திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதிமுக முதன்மை செயலாளர் துறை வைகோ என்று புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ கூறியதாவது :- இன்னும் இரண்டு தினங்களில் நான் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறேன் என்பது குறித்து அறிவிக்கப்படும். புதிதாக கிடைக்கும் சின்னத்தை 24 மணி நேரத்தில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது தற்போது உள்ள டிஜிட்டல் உலகத்தில் இது சாத்தியமானது.
வாக்குச்சீட்டில் சின்னங்கள் தான் முக்கியத்துவம் பெறும். கிராமப்புறங்களில் சின்னத்தை வைத்து தான் வாக்களிக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் 24 மணி நேரத்திற்குள் எனக்கு கிடைக்கும் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
வேட்பாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் சின்ன முக்கியம் கிடையாது. அந்த நம்பிக்கை மக்கள் மத்தியில் எனக்கு கிடைத்துள்ளது. மதிமுகவிற்கு மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு அவர்கள் கேட்டிருந்த சின்னம் கிடைக்காமல் போனதற்கு பாஜக காரணம்.
அவர்களுக்கு எதிராக எதிர்மறை கருத்துக் கூறுபவர்களை குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.
ஏற்கனவே, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவைகளை வைத்து எதிர்க்கட்சிகளை முடக்கி வரும் பாஜக, தற்போது தேர்தல் ஆணையத்தையும் அந்த வரிசையில் சேர்த்துள்ளது. திருச்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தை நான் கடந்து செல்லுமாறு தெரிவித்து விட்டேன். தற்போது திமுக எனக்கு நன்றாக ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்.
அந்த சம்பவத்தை வைத்து திமுகவை எங்களிடம் இருந்து பிரிப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை சிலர் எடுத்து வருகின்றனர், அது நடக்காது. அந்த சம்பவம் கடந்து போய்விட்டது, எனக் கூறினார்.