அதிமுக தொண்டர்களை இனி அடிமைப்படுத்த முடியாது.. வீறுகொண்டு விரட்டி அடிப்போம் ; ஆர்பி உதயகுமார் ஆவேசம்

Author: Babu Lakshmanan
30 March 2024, 5:42 pm

நோட்டாவுக்கு கீழ் வாக்குகள் பெறும் கட்சிகளுடன் தற்போது டிடிவி தினகரன் கூட்டணி வைத்துள்ளதாகவும், அவர் தேனி தொகுதியில் படுதோல்வி அடைவது உறுதி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து வாடிப்பட்டி பகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது :- தேனி பாராளுமன்ற தொகுதி எப்போதும் அதிமுக வசம் தான். திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், கடந்த தேர்தல்களில் ஒவ்வொரு முறையும் ஒரு கட்சியில் போட்டியிட்டார்.

எனவே, தற்போது அவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பது அவருக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது. எனவே அவர் வெற்றி பெறுவது இயலாது, எனக் கூறினார்.

டிடிவி தினகரன் அவர்கள் தங்களை பபூன் என்று கூறியுள்ளார் என்பதற்கு, நான் பப்புனுதான் அம்மா இருக்கிற காலத்துல எங்களை எல்லாம் மிரட்டினீர்கள். நாங்களும் பயந்தது தான் உண்மை, ஆனாலும் இன்று அதிமுக தொண்டர்கள் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள்.

பப்புன்னால மக்களுக்கு நல்லது தான் நடக்குது. வேட்பாளர் ஹீரோ தான், ஹீரோவும் பப்புனும் கடைசியில் வெற்றி பெறுவார்கள். ஆனால், வில்லன் வீரப்பா டிடிவி தினகரன் தோற்றுவிடுவார். எங்களை பப்புனு என்று கூறட்டும், நாயே என்று கூறட்டும், அதைப் பற்றி ஒன்றும் இல்லை. மக்களுக்கு தெரியும், நாங்கள் யார் என்று. ஆனால் வில்லன் நம்பியாரையும், வில்லன் வீரப்பாவையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

கடைசியில் வீரப்பா டிடிவி தினகரன் பெடா வழக்கில் உள்ளே செல்வார். எனவே வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசக்கூடாது, நாவடக்கம் தேவை. சென்னை ஆர்.கே. நகர் தேர்தலில் இருபது ரூபாய் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றவர், எனக் கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா கூட்டணி இயற்கையில் அமைந்தது என்று கேட்டதற்கு டிடிவி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, கடந்த தேர்தலில் நோட்டாவிற்கு கீழ் ஓட்டு வாங்கும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது தற்கொலைக்கு சமம் என்று கூறிய டிடிவி தினகரன் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.

தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இப்ப தெரியவில்லையா, அது நோட்டா கட்சி என்று. கடந்த 15 ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினர் சரியாக செய்யப்படவில்லை என்று கூறுகிறாரே, தேனி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, பக்கத்தில் இருந்த ரவீந்திரநாத் அவர்களிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும்.

இன்று பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் ஏறக்குறைய 9 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனால், திமுக ஏழு தொகுதிகளை கூட்டணி கட்சி கொடுத்துவிட்டு மூன்று தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. ஒரு ஆளும் கட்சி கூட்டணி கட்சிக்கு தொகுதி விட்டுக் கொடுக்கிறது என்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும்.

அதனால், இன்று தேர்தல் களத்தில் திமுக, அதிமுகவோ என்ற நிலை தான் உள்ளது. இடையில் யாருக்கும் போட்டி இல்லை. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும், எனக் கூறினார்.

ஆணிவேர் நீங்கள் என்று கூறுகிறீர்கள், ஆனால் போலிகள் என்று தினகரன் கூறுகிறாரே, என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அம்மா இருக்கும்போது சரி, அம்மாவிற்கு பின்பும் சரி, நாங்கள் அதிமுகவில் தான் இருக்கிறோம். இரட்டை இலையில் தான் போட்டியிடுகிறோம். இரட்டை இலைக்காகவே வாக்குகள் சேகரிக்கிறோம். அவர் கடந்த 15 ஆண்டுகளாக அம்மாவிற்கு பிறகு எங்கு இருந்தார் என்று தெரியாது.

யார் போலி என்பது அவருக்கு தெரியும். அப்போது நாங்கள் எல்லாம் அடிமையாக இருந்தோம். எங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். அன்று நாங்கள் வீட்டு காவல் நாயாக கூட இருந்தோம். ஆனால், இன்று அதிமுக இரண்டு கோடி தொண்டர்களும் சீரும் சிங்கமாகவும் மாறி உள்ளோம். எனவே, உங்களின் மறுமுகமும் தெரியும், மர்ம முகமும் தெரியும். இனிமேலும் அண்ணா திமுக தொண்டர்களை நீங்கள் அடிமைப்படுத்த முடியாது, வீறுகொண்டு விரட்டி அடிப்போம். வாய்க்கு வந்தபடி பேசாமல் இருக்கவும்.

திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரிக்க சென்றபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறுகிறார்களே, திமுக ஆட்சியில் பொய்யான வாக்குறுதிகளை கூறி எதுவுமே செய்யவில்லை என்பதால் எல்லா இடங்களிலும் மக்கள் எதிர்த்து தான் இருக்கிறார்கள். தொடர்ந்து திமுக வேட்பாளர்கள் எல்லா தொகுதிகளிலும் மக்களால் விரட்டி அடிக்கப்படுவார்கள், எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 245

    0

    0