தமிழகத்தில் 2026ல் பாமக – பாஜக கூட்டணி ஆட்சி அமையும்.. இது சத்தியம் : அன்புமணி ராமதாஸ் சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2024, 4:01 pm

தமிழகத்தில் 2026ல் பாமக – பாஜக கூட்டணி ஆட்சி அமையும்.. இது சத்தியம் : அன்புமணி ராமதாஸ் சவால்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிரச்சார பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்.. தொலைநோக்கு சிந்தனையுடன் பா.ம.க., தற்போது கூட்டணி அமைத்துள்ளது. இதை தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் விமர்சனம் செய்கிறது. முதல்வர் ஸ்டாலின், சமூக நீதி பேசும் பா.ம.க., ஏன் பா.ஜ., கூட்டணியில் சேர்ந்தது என்கிறார். சமூகநீதியை பற்றி பேச தி.மு.க.,வுக்கு என்ன தகுதி இருக்கிறது.

பா.ம.க.,பாஜ.க.வோடு கூட்டணி வைப்பது புதிதல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் 6 ஆண்டுகள் பா.ஜ.,வோடு, பா.ம.க., கூட்டணி வைத்தது.

அப்போது தி.மு.க.,வும் அதில், 5 ஆண்டுகள் அதே கூட்டணியில் தான் இருந்தது. அதை மறந்து ஸ்டாலின் பேசுகிறார்.

கடந்த, 2014, 2019, 2021 தேர்தல்களிலும் பா.ஜ.க.வோடு இணைந்து தான் பா.ம.க., தேர்தலை சந்தித்தது. தற்போதும் பா.ஜ.க. கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறோம். இதில் வெளியேறியது, அ.தி.மு.க., தான் என்றார்.

தமிழகத்தில் கடந்த, 57 ஆண்டுகளாக தி.மு.க,.வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி அமைத்தது போதும் என்று தான் தற்போது இதே கூட்டணியில் தொடர்கிறோம்.

அவர்கள் ஆட்சியில், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றியதை தவிர்த்து, குடிகாரநாடு, கஞ்சா நாடு என்ற பெயரைத்தான் பெற்று தந்துள்ளனர்.

இதை தடுக்கும் போலீசை ஆளுங்கட்சியினர் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னை சுற்றி, 4 அமைச்சர்களை வைத்துகொண்டு அவர்கள் சொல்படி செயல்படுகிறார். அவர்களோ, அமைச்சர்கள் என்ற பெயரில் வணிகம், வர்த்தகம் செய்யும் வியாபாரிகளாக செயல்படுகின்றனர் என்றார்.

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்மை பார்த்து துரோகம் செய்துவிட்டார்கள் என்கிறார். துரோகத்தை பற்றி யார் பேசுவது. தன்னை தூக்கி நிறுத்தியவர்கள், வழிநடத்தியவர்கள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும துரோகம் செய்தது யார். நாங்கள் பாட்டாளிகள். வியர்வை சிந்தி உழைப்பவர்கள். நம்பி வந்தால் உயிரை கொடுத்து அவர்கள் வெற்றிக்காக பாடுபடுபவர்கள்.

நாங்கள் உங்களோடு கூட்டணியில் இல்லாவிட்டால், உங்களால் கடைசி 2 ஆண்டுகள் ஆட்சி நடத்தியிருக்க முடியுமா. நாங்கள் உங்களிடம் கேட்ட, உள் ஒதுக்கீட்டையும், பல்வேறு போராட்டங்களுக்குப்பின் தேர்தல் அறிவிக்கும் நாளில் அறிவித்தீர்கள்.

அதுவும் நீங்கள் போட்ட அரைகுறை சட்டத்தை உயர்நீதிமன்றமே கண்டித்து சட்டம் ரத்து செய்யப்பட்டது. அந்த சட்டத்தை அமல்படுத்தவும், பா.ம.க.,வை கூட்டணி பேசி பணியவைத்தீர்கள். மீண்டும் அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு யாராவது குரல் கொடுத்தீர்களா.

அ.தி.மு.க.,வின், 66 எம்.எல்.ஏ.,க்களில், 36 பேரை வெற்றி பெற செய்த இந்த சமூகத்தினருக்காக, முனுசாமி, சம்பத், சண்முகம், வீரமணி உள்ளிட்ட யாராவது குரல் கொடுத்தார்களா.

சுதந்திரம் அடைந்த, 77 ஆண்டுகளில், 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்., குரல் கொடுத்ததா. ஆனால் பாரத பிரதமர் மோடி ஓ.பி.சி., சமூகத்தினருக்கு தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கான அரசியல் சாசன அந்தஸ்து பெற்று தந்தார். சேலம் பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வந்தபோது ராமதாசை கட்டிதழுவினார். எங்களுக்குள் அந்த நட்பு உள்ளது. அதை வைத்து தமிழ்நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும்.

ஆனால் தற்போதைய தி.மு.க., அரசு மத்திய அரசுடன் சண்டையிட்டு வருகிறது. அரசியல் மேடைகளில் கருத்து ரீதியாக பேசுவதை தவிர்த்து, அநாகரிமாக, சரியான அணுகுமுறை இல்லாமல் பேசி வருகின்றனர். வெள்ள நிவாரணம் தரவில்லை என மத்திய அரசை திட்டுகின்றனர்.

வெள்ள நிவாரணத்திற்கான முன்னேற்பாடு திட்டங்களை திமுக அரசு செய்யவில்லை. அந்த திட்டங்களை பற்றி புரிதல் உங்களிடம் இல்லை. பொருளாதாரம், சுகாதாரம், வேளாண்துறையில் வளர்ச்சி இலக்கை வைக்காமல், டாஸ்மாக் விற்பனையில் வளர்ச்சி இலக்கு வைக்கின்றனர்.

எனவே வரும், 2026ல், தி.மு.க., அ.தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி உருவாகும் வகையில் தொலைநோக்கு கூட்டணி வைத்துள்ளோம் என்றார்.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 345

    0

    0