திட்டங்களுக்கு இந்தியில் பெயர்களா?…. தேர்தல் அறிக்கை சர்ச்சையில் காங்.
Author: Udayachandran RadhaKrishnan6 April 2024, 9:22 pm
மோடி தலைமையிலான பாஜக அரசு மக்கள் பயன்பெறும் விதமாக ஒன்பது நலத் திட்டங்களை அறிமுகம் செய்தபோது அது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் அனைவரும் கொதித்து எழுந்து கண்டனம் தெரிவித்தனர்.
இதற்குக் காரணம் அந்தத் திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் ஜல் ஜீவன் மிஷன், ஸ்வச் பாரத் மிஷன், சௌபாக்ய யோஜனா, உஜ்வாலா யோஜனா, கரீப் கல்யாண் யோஜனா, ஜன்தன் யோஜனா ஆயுஷ்மான் யோஜனா, ஹர் கர் தீகா, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என இந்தியில் இருந்ததுதான்.
இதுதவிர இந்திய குற்றவியல் சட்டத்துக்கு பதிலாக கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட பாரதிய நியாய சம்ஹிதா 2023, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக இயற்றப்பட்ட பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023, இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு பதிலாக வந்த பாரதிய சாக்ஷிய விதேயக் 2023 போன்ற குற்றவியல் சட்டங்களும் பெரும் பேசும் பொருளாக ஆனது.
மோடி தலைமையிலான பாஜக அரசு இந்திய மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக சட்டப்பிரிவுகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டியிருக்கவேண்டும். ஆனால் வாயில் நுழையாத அளவிற்கு ஹிந்தியில் பெயரை வைக்கிறார்கள். இந்தி எங்களுக்கு தெரியாது என்ற உணர்ச்சிமிகு கோஷங்களையும் தமிழகத்தில் சில நடிகர், நடிகைகளும் எழுப்பினர்.
தவிர இந்தியை திணிப்பது போல ஏதாவது ஒரு விஷயம் தமிழகத்தில் நடந்து விட்டால் அமைச்சர் உதயநிதி உட்பட திமுகவினர் இந்தி தெரியாது போடா… என சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் செய்வதையும் இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் ஏப்ரல் 5ம் தேதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “குடும்பத்தில் பெண் ஒருவருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் வழங்கப்படும். நீட், கியூட் தேர்வு மாநிலங்களின் விருப்பத்துக்கு உட்பட்டதாக அறிவிக்கப்படும். SC, ST மற்றும் OBCக்கான இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படும்.
ஒரேநாடு ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படாது. தற்போதைய ஜிஎஸ்டி சட்டங்கள் மாற்றப்படும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இடபிள்யூஎஸ், சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பிணையின்றி 7.5 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்படும். 2024 மார்ச் 15 வரை வழங்கப்பட்ட அனைத்து கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
2025-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் வழங்கப்படும்” என பல்வேறு கவர்ச்சிகர வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டு இருந்தன.
48 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு அறிக்கையை விவரித்தார்.
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான நீதி, சமூக நீதி ஆகிய 5 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை ‘நியா பத்ரா’என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ‘பாஞ்ச் நியாய்’ மற்றும் ‘பச்சீஸ் உத்தரவாதம்’ என்பது இந்த தேர்தல் அறிக்கையின் பரந்த கருப்பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “இந்த அறிக்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் ‘நியா கா தஸ்தவேஸ்’ ஆக இருக்கும். ‘பாரத் ஜோடோ நியாய யாத்ரா’வின் ஐந்து தூண்களான யுவா, கிசான், நாரி ஷ்ராமிக், ஹிஸ்சேதாரி ஆகியவற்றில் இருந்து 25 உத்தரவாதங்கள் வெளிப்படும்” என்று குறிப்பிட்டார்.
காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை விட அதில் பயன்படுத்தப்பட்ட இந்தி வார்த்தைகள் தான் தற்போது தமிழகத்தில் பெரும் விவாதத்துக் குரிய விஷயமாக மாறி இருக்கிறது. ஏனென்றால் இந்தியை எந்த வடிவத்திலும் திணிக்க கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரத்தின் முன்பாகவே அக் கட்சியின் மேலிடம் வலுக்கட்டாயமாக தேர்தல் அறிக்கையில் இந்தி வார்த்தைகளை புகுத்தி இருக்கிறது.
ஆனால் தமிழகத்தில் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கும் திமுக, விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை இதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் இந்தி தெரியாது போடா என்று கொந்தளிக்கும் அமைச்சர் உதயநிதியும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்தி பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது பற்றி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
என்ற போதிலும் ஃப்ரண்ட் லைன் இதழின் மூத்த இணை ஆசிரியரான ராதாகிருஷ்ணன், காங்கிரசின் இந்தி திணைப்பை கிண்டலடித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில், “நாய் = நாய். பத்ரா = பாத்திரம். நியாய பத்ரா தெரிகிறது. நான் சம்பித் பத்ரா பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன்! டேய் ! காங்கிரஸும் BJP போன்று இந்தி அல்லாத இந்தியாவின் வாக்குகளை மட்டுமே விரும்புகிறது. ஹிந்திதெரியாது போடா!”என்று போட்டுத் தாக்கி இருக்கிறார்.
அதற்கு பதில் கமெண்ட் செய்துள்ள ஒருவர், காங்கிரஸும் நாடகம் தான் போடுகிறது என்று மறைமுகமாக கேலி செய்திருக்கிறார். அவர் தனது பதிவில் “இல்லை சார். இது பரஸ்பரம் பிரத்தியேகமானது. அங்கு வாக்குகளைப் பெற அவர்கள் பெயர்களை இந்தியில் வைக்க வேண்டும். இங்கு வாக்குகளைப் பெற அவர்கள் பெயர்களை இந்தியில் வைக்கக் கூடாது. வடக்கு ஒரு பெரிய விளையாட்டு என்பது அவர்களுக்குத் தெரியும். தெற்கு வசதியானது. எனவே இந்தி” என நெற்றியடி கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப சிதம்பரம், “நீட் தேர்வு செல்லும் என்று 2017ல் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு கூறியதால்தான் அத் தேர்வு எல்லா மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது. இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு எந்த வகையிலும் காரணம் அல்ல” என்று கூறி இருக்கிறார்.
அதேநேரம் நீட் தேர்வுக்கு ஆதரவாக சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்காக வாதாடி 2017 ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றவர், அவருடைய மனைவி நளினிதான்.
தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத 2007 முதல் 2016 வரையிலான பத்தாண்டு காலத்தில் அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற பிளஸ் டூ மாணவ, மாணவிகளில் 290 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தது. அதேநேரம் தனியார் பள்ளிகளில் படித்து மிக அதிக மதிப்பெண்கள் எடுத்த
30 ஆயிரம் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்து விட்டனர் என்ற வாதத்தை ஆதாரங்களுடன் நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வைத்தார். இதையும் நீதிபதிகள் அமர்வு ஏற்றுக் கொண்டது.
அது மட்டுமல்ல “இனி நீட் தேர்வே வேண்டாம் என்றால் கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்யவேண்டும்” என்று நளினி அப்போது கூறியதை ப. சிதம்பரம் தனக்கு வசதியாக மறந்துவிட்டார்.
ஒருவேளை இண்டியா கூட்டணி
மத்தியில் ஆட்சிக்கு வர நேர்ந்தால்
அரசியல் வேறு, வக்கீல் தொழில் வேறு, குடும்பம் வேறு என்று காங்கிரஸ் காரணம் கூறாமல் நீட் தேர்வு குறித்து ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.
ஏனென்றால் விரும்பும் மாநிலங்கள் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம் இல்லையென்றால் கைவிடலாம் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறுவது கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகவே தென் படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து அதே சமயம் நீட் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றால் எங்கே போய் மருத்துவம் படிப்பார்கள்? என்ற நியாயமான கேள்வியும் எழும்” என கல்வியியல் அறிஞர்கள் சந்தேகம் கிளப்புகின்றனர்.