தமிழகத்தின் கலாச்சாரம், சனாதனத்தை ஒழிக்க திமுக செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan7 April 2024, 2:52 pm
தமிழகத்தின் கலாச்சாரம், சனாதனத்தை ஒழிக்க திமுக செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிதம்பரம், கரூர் , விருதுநகர் தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று இரவு அவர் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். 3 தொகுதிகளுக்கும் அவர் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார்.
தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பண்பாடு, சனாதன தர்மம் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆனால் எதிரணியில் உள்ள தி.மு.க.வினர் சனாதனத்தையும், கலாசாரத்தையும் எப்படி ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.
மத்திய அரசு நிதியானது 4 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.1650 கோடி வழங்கப்பட்டு உள்ளது. கிராமபுற சாலை திட்டங்களுக்கு ரூ.630 கோடி வழங்கப்பட்டு உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்திற்காக ரூ.822 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. கிராம வளர்ச்சிக்காக ரூ.10,800 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை, திருச்சி, ஓசூர், கோவை, சேலம் உள்ளது. இதன் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளோம், 11 ஸ்மார் சிட்டி தமிழகத்திற்கு மோடி தந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மீது மோடிக்கு மிகப்பெரிய பாசம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஊழலை ஒழிப்பேன் என்று மோடி சபதம் ஏற்று உள்ளார். இந்தியா கூட்டணியோ ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று சபதமேற்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
வாரிசு அரசியல், பணம் கொள்ளை யடித்தல், கட்டப்பஞ்சாயத்து என்று தி.மு.க. குடும்ப ஆட்சியின் கூடாரமாக இருந்து வருகிறது.
பாராளுமன்றத்தில் மோடி தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டு வர நினைக்கும் போதெல்லாம் தி.மு.க.வும், காங்கிரசாரும், அவரை பேசவிடாமல் செய்து விடுகிறார்கள். ஆகவே தமிழக கலாசாரம், பண்பாடு, மொழியை பாதுகாக்க பா.ஜ.க. பாடுபட்டு கொண்டிருக்கிறது.