விஷாலை அரசியலில் இயக்கப் போவது யார்…? விஜய் கட்சியை பலவீனப்படுத்த அவதாரம்!

Author: Babu Lakshmanan
15 April 2024, 8:21 pm

இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் விஷாலுக்கு அரசியல் மீது அப்படி என்ன மோகமோ தெரியவில்லை, 2026க்கு முன்பாக புதிய கட்சியை தொடங்கி தமிழக தேர்தலை சந்திக்கப் போவதாக திடீரென ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அரசியலுக்கு யார் வரவேண்டும், வரக்கூடாது என்றெல்லாம் நிபந்தனையோ, தடையோ விதிக்க முடியாது. ஏனென்றால் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சிகளை தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதற்கு உரிமை உண்டு.

மேலும் படிக்க: அதிமுகவை பிளவுபடுத்த திட்டம் தீட்டிய பாஜக.. சபதத்தை நிறைவேற்றுவோம் ; அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்..!!!

அதேநேரம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்து எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே விஷாலும், புதிய கட்சியை தொடங்கி 2026 தேர்தலை சந்திக்கப் போவதாக பரபரப்பு தகவல் பரவியது.

ஆனால் அப்போது இதை அவர் உடனடியாக மறுத்தார். “நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை. தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் கால கட்டங்களில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என குறிப்பிட்டார்.

அதாவது விஜய் போல தனக்கும் அரசியலில் குதிக்கும் ஆசை இருக்கிறது என்பதை சூசகமாக விஷால் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் இதற்கு அப்போது விளக்கம் அளித்தனர்.

இதை உண்மை என்று சொல்வது போல, தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதியை நல்ல நாளாக கருதி அன்றைய நாளில் விஷால் தனிக்கட்சி பற்றி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் 2026ம் ஆண்டு தமிழக தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக தெரிவித்தார்.

மேலும் விஷால் கூறும்போது,”நான் அரசியலுக்கு வருவதை வெளிப்படையாகவே சொல்லி வருகிறேன். ஏற்கனவே எத்தனையோ அரசியல் கட்சிகள், தலைவர்கள் இருக்கும்போது விஷால் ஏன் வரவேண்டும் என்ற கேள்வி எழலாம். எதுவும் சரியாக இல்லாததால்தான் நான் அரசியலுக்கே வருகிறேன்.

அரசியலை ஒரு தொழிலாக நினைத்து இதில் சம்பாதிக்கலாம் என்று வந்தால் சறுக்கல்தான். ஒரு விஷயத்தைச் சாதிக்க வேண்டும் என்றால் நிறைய விஷயங்களை. இழக்க வேண்டும். இனி புதிதாக வரும் அரசியல்வாதிகளுக்குப் பொறுமை மிக முக்கியம். நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று ஏன் வெளிப்படையாகச் சொல்கிறேன் என்றால், நான் எப்போதும் எதையும் மூடி மறைத்தது கிடையாது.

2026 வேட்பாளர் பட்டியலில் எனது பெயரும் நிச்சயம் இருக்கும். அந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலும் இருக்கும். அதில் மக்கள் தேர்வு செய்வதற்காக நிறைய நல்லவர்களும் இருப்பார்கள். முதலில் நான் தனியாக வந்து என்னை நிரூபிக்க வேண்டும் அதன்பிறகு கூட்டணி பற்றி பார்க்கலாம்” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: ‘மோடி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்திடுவாரு’… திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பகீர்..!!

நடிகர் விஜய்க்கு போட்டியாக விஷால் தனிக் கட்சி தொடங்கவில்லை என்று கூறப்பட்டாலும் கூட அவருடைய திடீர் அறிவிப்பு பல்வேறு சந்தேகங்களை தமிழக அரசியல் வட்டாரத்தில் கிளப்பி விட்டிருக்கிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 தேர்தலில் 16 சதவீத வாக்குகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவருடைய தீவிரப் பிரச்சாரத்தை பொறுத்து அது 20 சதவீதமாக உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் இப்போதே கணிப்புகள் வெளிவரத் தொடங்கி விட்டன.

அதேநேரம், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் முன்னணி கட்சிகளாக திகழும் இரு பெரும் கட்சிகளின் வாக்கு வங்கியை கணிசமாக கரைத்து விடும்.
அதுவும் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து 2026 தமிழக தேர்தலை சந்தித்தால் ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு அக் கூட்டணி வலுப்பெற்று விடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதில் பிரதான மூன்று எழுத்து கட்சிதான் பெரும் அளவில் வாக்கு வங்கியை இழக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் விஜய் குறி வைக்கும் விளிம்பு நிலை வாக்காளர்கள் அக்கட்சியில்தான் மிக அதிகம். இதை தடுக்கும் முயற்சியாகவே அக்கட்சி நடிகர் விஷாலை தனிக்கட்சி தொடங்க வைத்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வேகமான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முயற்சிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

“இது உண்மையாகவும் இருக்கலாம்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் 2017-ம் ஆண்டின் இறுதியில் நடந்த ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக, நடிகர் விஷால் மனு தாக்கல் செய்தார். அவர் போட்டியிட்டால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் வெற்றி வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும். இருபது ரூபாய் டோக்கன் கூட எடுபடாமல் போய்விடும் என்று கூறப்பட்டதால் நடிகர் விஷால் தனது வேட்பு மனுவில் வேண்டுமென்றே சில தகவல்களை பூர்த்தி செய்யாமல் விட்டுவிட்டார் என்றும் இதனால்தான் அவருடைய வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது, டிடிவி தினகரனின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டது என்றும் கூறுவார்கள்.

இப்படி வேட்பு மனுவை அரைகுறையாக தாக்கல் செய்ததில் கூட பிரதான மூன்று எழுத்து கட்சியின் கைங்கர்யம் இருந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதன் மூலம் தனிப்பட்ட முறையில் நடிகர் விஷால் ஆதாயம் எதுவும் அடைந்தாரா? என்ற கேள்வியும் அப்போது சமூக ஊடகங்களில் சரமாரியாக எழுப்பப்பட்டது.

தமிழ்த் திரைப்பட நடிகர்களில் தனிக்கட்சி தொடங்கி தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி கண்டவர்கள் என்ற பெருமை எம்ஜிஆருக்கும், விஜயகாந்த்க்கும் மட்டுமே உண்டு. 1973 திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அபார வெற்றி கண்டது. 2006-ம் ஆண்டு தமிழகத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றது. என்றபோதிலும் ஆட்சியை கைப்பற்றிய சாதனையை படைத்தவர் எம்ஜிஆர்தான்.

இவர்களைத் தவிர தனிக் கட்சி தொடங்கி முதன் முதலாக தேர்தலில் களம் கண்ட பிரபல நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், பாக்யராஜ், ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக், கருணாஸ், மன்சூர் அலிகான் போன்ற யாருமே வெற்றி பெறவில்லை. நடிகரும் இயக்குனருமான சீமானின் கட்சி மட்டுமே ஓரளவு தாக்கு பிடித்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. அதற்கும் கூட இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.

ஆனால் நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே, தனது ரசிகர்கள் மன்றங்கள் மூலம் படிப்படியாக தனது கட்சிக்கான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டார். அதனால் அவருக்கான வாக்கு வங்கியும் உருவாகிவிட்டது. தற்போது வரை அவருடைய கட்சியில் 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 2026 தேர்தலுக்கு முன்பாக இன்னும் ஒரு கோடி பேரை தனது கட்சியில் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்து விஜய் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது. மும்முனை அல்லது நான்கு முனை போட்டியில் ஒரு கோடியே 80 லட்சம் வாக்குகள் என்பது வெற்றிக்கான இலக்காக அமைவதற்கு வாய்ப்பும் உள்ளது.

ஆனால் விஷாலை தேர்தல் களத்தில் இறக்குவதன் மூலம் நடிகர்கள் தொடங்கும் தனிக்கட்சி குறித்து மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்த முடியும். ஏனென்றால் இந்த நடிகர்களுக்கு வேறு வேலையே இல்லையா?… சினிமா பட வாய்ப்பு இல்லை என்றால் உடனே தனிக் கட்சி தொடங்கி, ஓட்டு கேட்க வந்து விடுகிறார்கள் என்ற சலிப்பை உருவாக்கி விட்டால் அதன் மூலம் விஜய் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு பெருகுவதை தடுத்துவிடலாம் என்று கருதித்தான் அந்த மூன்றெழுத்து கட்சி நடிகர் விஷாலை தூண்டிவிட்டுள்ளது என்று கருதத் தோன்றுகிறது.

அதேநேரம் சினிமாவில் விஷால் சம்பாதித்தது மிகவும் குறைவு. அதை இழக்க அவர் ஒருபோதும் விரும்ப மாட்டார். யாராவது அவருக்கு பெரிய அளவில் பொருளாதார ரீதியாக உதவினால் விஜய் கட்சியை நீர்த்துப்போகச் செய்வதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. எனினும் அரசியலில், தான் நினைத்தது போல் சாதிக்க முடியாது என்று நினைத்தால் கடைசி நேரத்தில் தனிக் கட்சி தொடங்கும் எண்ணத்தை அவர் கைவிடுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

எப்படிப் பார்த்தாலும் திரை மறைவில் விஷாலுக்கு தனிக்கட்சி தொடங்குமாறு அழுத்தம் கொடுத்து வருவது ஒரு பிரதான கட்சிதான். ஏனென்றால் அந்தக் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள்தான் விஜய் அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்த உடனேயே அவரைக் கேலியும் கிண்டலும் செய்து கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதனால் யாரோ ஆட்டுவிக்கிறார்கள், விஷால் அதற்கேற்ப ஆடுகிறார் என்றே கருதத் தோன்றுகிறது”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதுவும் யோசிக்க கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 307

    0

    0