மாமூல் கேட்டு மிரட்டும் அமைச்சர் உதவியாளரின் ஆதரவாளர்கள்.. ஒப்பந்த நிறுவனம் பரபரப்பு புகார்..!!
Author: Babu Lakshmanan16 April 2024, 4:14 pm
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் ஊழியர்களை மிரட்டி மாமூல் கேட்பதாக அமைச்சர் உதவியாளரின் ஆதரவாளர்கள் மீது ஒப்பந்த நிறுவனமான KCP Infra Limited சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைகள், மேம்பாலங்கள் என தென்னிந்திய மாநிலங்களின் உள்கட்டமைப்பு பணிகளை, அரசின் டெண்டரை எடுத்து வெற்றிகரமாக செய்த வருகிறோம்.
மேலும் படிக்க: வாய் கூசாமல் இப்படி கேட்கலாமா..? ஸ்டாலின் உயிரோடு இருக்க காரணமே பிரதமர் தான் ; எச்.ராஜா தடாலடி!!
தற்போது, தமிழ்நாட்டு மின்சார கட்டுப்பாட்டு வாரியத்தின் பராமரிப்பில் இருக்கும் எண்ணூர் அனல் மின் நிலையத்தில், சாம்பல் கழிவுகளை எடுக்கும் பணியை ஒப்பந்தம் முறையில் மேற்கொண்டு வருகிறோம்.
இந்த நிலையில், சாம்பல் பணிகளை எடுக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது, பலமுறை ஜெயிலுக்கு சென்று வந்ததாகக் கூறப்படும் தனசேகர் என்பவரின் தலைமையில் அங்கு வந்த உள்ளூர் ரவுடிகள் சிலர், ஒரு லாரிக்கு ரூ.500 வீதம் மாமூல் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். மேலும், லாரியில் சாம்பலை ஏற்ற விடாமல், எங்கள் ஊழியர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அப்போது, எதுவாக இருந்தாலும் எங்கள் MD-யில் பேசிக் கொள்ளுமாறு, எங்கள் நிறுவன ஊழியர்கள் தொலைபேசி எண்ணை கொடுப்பதாக கூறியுள்ளனர். அதற்கு, ‘உங்கள் MD-யிடம் நாங்கள் பேச முடியாது, நீ வேண்டுமானால் போன் போட்டு, எங்கள் தலைவன் தனசேகர், மின்வாரியத் துறை அமைச்சரின் உதவியாளரான கோபாலுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லு,’ என்று கூறியுள்ளனர்.
சாம்பல் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த எங்கள் ஊழியர்களை, இந்த ரவுடிகள் மிரட்டுவதை மின்வாரிய அதிகாரிகள் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தனர். மேலும், இந்த விவகாரத்தை பெரிது படுத்தினால், கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இது போன்ற மிரட்டல்களால் எங்கள் நிறுவனத்தால் பணிகளை முறையாக செய்து முடிக்க முடியவில்லை. இதன்காரணமாக, அதிகாரிகள் எங்கள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
எனவே, பணி செய்ய விடாமல் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்து வரும் அமைச்சரின் உதவியாளரின் ஆதரவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.