EPS பக்கம் சாய்ந்த சசிகலா?… அரசியல் களத்தில் திடீர் ட்விஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan17 April 2024, 9:23 pm
EPS பக்கம் சாய்ந்த சசிகலா?… அரசியல் களத்தில் திடீர் ட்விஸ்ட்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி கே சசிகலா தேனி தொகுதியில் போட்டியிடும் தனது அக்காள் மகன் டிடிவி தினகரனுக்கும், ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ள முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்ட நிலையில் அவர் இந்த தேர்தலின்போது அமைதியாகி விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
அதேநேரம் டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் தங்களது தொகுதியில் சசிகலா பிரச்சாரம் செய்தால் தாங்கள் சார்ந்த சமுதாய ஓட்டுகளை அப்படியே முழுமையாக அள்ளி எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்கு போட்டு வைத்திருந்தனர்.
ஆனால் இவர்கள் இருவரின் சமீப காலத்திய நடவடிக்கைகள் முற்றிலும் அதிமுகவுக்கு எதிராக மாறிவிட்டது என்பதை சசிகலா நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார்.
ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, 2026 தமிழக தேர்தலுக்குள் அதிமுக ஓபிஎஸ் வசம் வந்துவிடும் என்று ஒரு கருத்தை தெரிவித்தார். இது சாத்தியமா? இல்லையா? என்பது விவாதத்துக்குரிய விஷயமாக இருந்தாலும் கூட சசிகலா இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
மேலும் படிக்க: பிரச்சாரம் முடிந்த கையோடு.. தங்கும் விடுதிகளில் அதிரடி RAID : அறையில் தங்கியவர்களுக்கு அதிர்ச்சி!!
அதிமுகவில் முன்பு முக்கிய பதவியில் இருந்த ஒருவர் பற்றித் தானே டிடிவி தினகரன் குறிப்பிடுகிறார் என்று அவர் அமைதியாக இருந்துவிட்டார்.
அதேநேரம் தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த பிறகு அதிமுக தொண்டர்கள் டிடிவி தினகரன் பின்னால் வரிசை கட்டி நிற்பார்கள் என்று அதிரடி காட்டினார்.
மேலும் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இரண்டு திராவிட கட்சிகளில் ஒன்று காணாமல் போகும் என்றும் கூறியிருந்தார். இந்த இரண்டு கருத்தும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் இந்த பேச்சுதான் சசிகலாவை ரொம்பவே மனம் நோக வைத்துவிட்டது, என்கிறார்கள்.
ஏற்கனவே அதிமுகவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அக் கட்சியை தமிழகத்தில் இருந்து அகற்றி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வரும் டெல்லி பாஜக மேலிடம் சொல்லித்தான் இதை அண்ணாமலை பேசி இருப்பாரோ? என்று சசிகலா உறுதியாக நம்புவதற்கு வாய்ப்பும் உள்ளது.
தவிர டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்சையும் அண்ணாமலை காமெடி நடிகர்கள் போல ஆக்கிவிட்டார். அவர் அளவுக்கு மீறி அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிடுகிறார், மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதாலும், அடுத்து அமையப் போவதும் பாஜக ஆட்சிதான் என்று கூறப்படுவதாலும் தொடர்ந்து மிரட்டல் விடுப்பது போல் ஆணவமாக பேசுகிறார் என்ற வருத்தம் சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளதையும் உணர முடிகிறது.
அதனால் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக பாராட்டும் விதமாகவே செயல்படுகிறது, அது தொடரட்டும் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நமது எம்ஜிஆர் நாளிதழ் தலையங்கத்தில் அதிரடியாக சில கருத்துக்களை சசிகலா பதிவு செய்து இருக்கிறார்.
“கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் இன்றைக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். அதாவது இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது பதவிகளை தட்டி பறிக்கவேண்டும் என்று தாண்டி குதிப்பவர்களை எண்ணி யாரும் சிறிதும் கவலைப்படாதீர்கள். அவர்கள் எண்ணம் தவறானது, இயக்கத்திற்கு எதிரானது என்பது வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டது.
உண்மையான கழகத் தொண்டர்களின் பேராதரவோடு நம் இயக்கம் சீரோடும் சிறப்போடும் செழிக்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோன்று இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்க மக்களுக்காகவே இயங்கும் என்று சூளுரைத்த நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எண்ணமும் நிச்சயம் ஈடேறும்” என்று அந்த தலையங்கத்தில் சசிகலா குறிப்பிட்டு இருக்கிறார்.
அவருடைய இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி விட்டிருக்கிறது.
சசிகலாவின் தலையங்கத்தில் இரண்டு விஷயங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது பதவிகளை தட்டி பறிக்கவேண்டும் என்று தாண்டி குதிப்பவர்கள் என அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது நன்றாகவே புரிகிறது. அதேநேரம் யாராலும் அதிமுகவை அழித்து விட முடியாது அது இன்னும் பல நூறு ஆண்டுகள் இயங்கும் என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேறும் என்றும் சொல்கிறார். இதன்மூலம் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்திருப்பதாகவே கருதத் தோன்றுகிறது.
அதேநேரம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்பு ஒரு திராவிட கட்சி காணாமல் போகும் என்று அண்ணாமலை அதிமுகவை பூடகமாக குறிப்பிட்டாலும் அதே பெயரில் செயல்படும் கட்சி டிடிவி தினகரன் கைக்கு வந்த பின்பு அவருடன் கைகோர்க்க பாஜக தயாராக இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்றுதான் தெரியவில்லை.
“இப்படி திடீரென்று டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்சையும் சசிகலா மறைமுகமாக சாடி இருப்பதற்கு பல பின்னணி காரணங்கள் உண்டு” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய முதலமைச்சராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது இரவு நேரத்தில் ஜெயலலிதா நினைவிடம் முன்பாக அமர்ந்து அவர் தர்ம யுத்தத்தில் ஈடுபட்டார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று சசிகலாவை சாடவும் செய்தார்.
2017ல் தனது அணியை அதிமுகவில் இணைப்பதற்கு ஓபிஎஸ் விதித்த மிக முக்கிய நிபந்தனை சசிகலாவையும், டிடிவி தினகரனையும் கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும்வரை இணைப்பு என்பது சாத்தியமில்லை. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி அதில் தன்னை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கவேண்டும் என்றும் டெல்லி பாஜக மூலம் வலியுறுத்தினார். இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டதால் ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பி துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவற்றையெல்லாம் சசிகலா இன்றளவும் மறக்காமல் அப்படியே மனதில் வைத்துள்ளார். அதனால் தான் ஓபிஎஸ் தன்னை பலமுறை சந்திக்க முயன்றபோதும் அதை தவிர்த்து விட்டார்.
அதேபோல சிறைக்கு செல்லும் முன்பாக அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்துவிட்டு கட்சியை கவனமாக பார்த்துக்கொள் என்று கூறியதையும் மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை கவிழ்க்க
முயன்றதையும் அவர் தனிக்கட்சி தொடங்கியதையும் சசிகலா ஏற்கவில்லை. இப்படி கட்சிக்குள் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கு முக்கிய காரணமே டிடிவி தினகரனும்,ஓ பன்னீர்செல்வமும்தான்.
இவர்கள் இருவரின் கைகளிலும் அதிமுக சென்றால் 2026 தமிழகத் தேர்தலில் நிச்சயம் பாஜகவுடன்தான் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவார்கள். அப்போது பாஜகவின் தலைமையை ஏற்றுக் கொண்டு அக்கட்சி 50 இடங்களை கொடுத்தாலும் கூட அதை மன மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ள டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் சம்மதித்து விடுவார்கள். பிறகு தானாகவே அதிமுக மெல்ல மெல்ல கரைந்து போகும். இதை முன்கூட்டியே உணர்ந்துதான் என்னவோ தற்போது அதிமுக சிறப்பாகவே செயல்படுகிறது என சசிகலா தலையங்கம் எழுதி இருப்பதாக கருதத் தோன்றுகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் சசிகலா எழுதியுள்ள திடீர் தலையங்கம் டிடிவி தினகரனுக்கும், ஓபிஎஸ்சுக்கும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கணிசமான அளவில் வாக்கு இழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இது அவர்களின் எதிர்கால அரசியலுக்கு வேட்டு வைக்கவும் செய்யலாம்” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!