ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..!!
Author: Babu Lakshmanan22 April 2024, 10:23 am
மதுரை சித்திரை திருவிழாவின் 11ஆம் நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர்களின் பவனி மாசி வீதிகளை அலங்கரித்தன.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் மற்றும் சுவாமியை வரவேற்று தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்க: சாதகமாக காய் நகர்த்தி சதி செய்த திமுக.. மறு வாக்குப்பதிவு நடத்துங்க ; BJP வலியுறுத்தல்!!!
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மேலும், விழாவில் மீனாட்சி பட்டாபிஷேகம் , திருக்கல்யாணம் என முக்கிய விழாக்கள் நடைபெற்றதன் தொடர்ச்சியாக இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது. அம்மனும், சுவாமியும் அதிகாலை 4.00 மணிமுதல் 4.30 மணிக்குள் கோவிலின் உள்ளே அமைந்துள்ள ம. முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படியிலும், பிறகு ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியிலும் எழுந்தருளினர்.
சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும் , அருள்மிகு மீனாட்சிஅம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருள அதிகாலை 5.15 மணி முதல் 5.40 மணிக்குள் தேரடியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 6.30 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது.
கீழமாசி வீதி தேரடியில் துவங்கிய இந்த தேரோட்டம் தொடர்ந்து தெற்கு மாசி வீதி , மேலமாசி வீதி , வடக்குமாசி , வழியாக வலம் வந்து இன்று நண்பகல் நிலையை அடையும். தேர் வலம் வந்த நான்கு மாசி வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்ததுடன் நகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சித்தரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா வரும் (நாளை) 23-ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும், இன்று மதுரை மூன்றுமாவடி அருகே அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.