என்னை டார்க்கெட் பண்றாங்க… ரூ.200 கோடிய விட ரூ.4 கோடி பெரிசா போச்சா ; நியாயம் கேட்கும் நயினார் நாகேந்திரன்..!!

Author: Babu Lakshmanan
25 April 2024, 11:26 am

தேர்தல் சமயத்தில் தாம்பரம் ரயில்நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, சென்னையில் இருந்து நெல்லைக்கு கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தாம்பரம் ரயில்நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

சோதனையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சதீஷ் (33) நவீன் (31), பெருமாள் (25) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தியதில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளித்திருந்தனர். ஆனால், ஆஜராவதற்கு அவகாசம் கோரியிருந்தார். இந்தநிலையில் இன்று காலை தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனை சந்தித்து 2வது முறையாக சம்மன் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க: இப்படியே போனால் நிச்சயம் தங்கம் வாங்கிடலாம் ; சற்று குறைந்து ஆறுதல் அளித்த தங்கம் விலை!!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், மே 2ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக இருக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் என்னுடைய பணம் இல்லை. எங்கையோ பறிமுதல் செய்யப்ப்ட்ட பணத்தை என்னுடன் தொடர்பு படுத்துகின்றனர்.

தமிழகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. ஆனால் 4 கோடியை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி இந்த விஷயத்தில் நான் டார்கெட் செய்யப்படுகிறேன். இதனை அரசியல் சூழ்ச்சியாக பார்க்கிறேன், எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 816

    0

    0