சேகோ ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம்… மனைவி கொடுத்த கடிதம்… வசமாக சிக்கிய மகன்… பின்னணியில் பகீர்!!
Author: Babu Lakshmanan26 April 2024, 1:32 pm
சொத்து பிரச்சினையில் தந்தையை மகன் கொடூரமாக தாக்கும் ‘சிசிடிவி’ வீடியோ காட்சி வைரலான நிலையில், 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (68). இவருக்கு ஹேமா (65) என்ற மனைவியும், சக்திவேல் (34) எனும் மகனும், சங்கவி (32) எனும் மகளும் உள்ளனர்.
குழந்தைவேலுக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய் பகுதியில் மரவள்ளி கிழங்கு அரவை செய்யும் சேகோ ஆலையும், பெரம்பலுார் பகுதியில் அரிசி ஆலை மற்றும் 100 ஏக்கரில் விவசாயத் தோட்டமும் உள்ளது.
மேலும் படிக்க: கண்ணில் பட்டவர்களை எல்லாம் விரட்டி விரட்டி வெட்டிய போதை ஆசாமிகள்… 12 பேருக்கு அரிவாள் வெட்டு… சென்னையில் அதிர்ச்சி!!!
திருமணமான மகன் சக்திவேல் ஆத்துாரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தலைவாசல் அருகே சார்வாய் பகுதியில் உள்ள சேகோ ஆலை உள்ளிட்ட சொத்துகளை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி, தனது தந்தை குழந்தைவேலிடம் சக்திவேல் கேட்டுள்ளார்.
அதற்கு, குழந்தைவேலு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சக்திவேல், தகராறு செய்து, வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார். சொத்து விவகாரத்தில் இருவரிடையே அடிக்கடி தகராறு வந்து கொண்டிருந்ததால், அவர்களின் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு வந்துள்ளது.
ஒருபுறம் சொந்த பந்தத்தை விட சொத்து தான் முக்கியம் என்ற எண்ணம் சக்திவேலின் மனதில் வடுவாக பதிந்து விட்டது. இதனால், எப்படியாவது சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி விட வேண்டும் என்று பல வழிகளை அவர் கையில் எடுத்து முயற்சித்து வந்துள்ளார்.
இதன் ஒருபகுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி ஊர் முக்கியஸ்தர்களை அழைத்துச் சென்ற சக்திவேல், சொத்து குறித்து தனது தந்தையிடம் கேட்டுள்ளார். ஆறு மாதத்துக்கு பின், சொத்து எழுதுவது குறித்து பேசிக் கொள்ளலாம் எனக் கூறி குழந்தைவேலுவும் ஊரின் முக்கியஸ்தர்களிடம் கூறி அனுப்பிவிட்டார். தந்தையின் செயலால் சக்திவேல் தொடர்ந்து கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த சூழலில், கோபத்தின் உச்சத்திற்கே சென்ற தந்தை உயிருடன் இருக்கும் வரை சொத்து தனக்கு கிடைக்காது என்று நினைத்துக் கொண்டு, கடந்த பிப் 16ம் தேதி ஆவேசமாக பெரம்பலூரில் உள்ள தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார் சக்திவேல். அங்கு வீட்டின் வெளியே சோபாவில் அமர்ந்திருந்த தந்தை குழந்தைவேலை, சரமாரியாகவும், கொடூரமாகவும் தாக்கியுள்ளார். ஒரு குத்துச்சண்டை வீரரை போல தந்தையின் முகத்தில் விடாமல் குத்து விட்டுள்ளார். இதில், மூக்கு மற்றும் கண்ணம் பகுதிகளில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதனால், குழந்தைவேலு நிலைகுலைந்து போனார்.
இதனைக் கண்டு அலறிய குடும்பத்தினர், சக்திவேலை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், யார் பேச்சையும் கேட்காமல் தந்தையை மீண்டும் மீண்டும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். படுகாயமடைந்த அவரை, காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, மீண்டும் அவரது மகன், தந்தையை கீழே இழுத்து தாக்கியுள்ளார்.
பின்னர் பலத்த காயமடைந்த குழந்தைவேலு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் போலீசார் ஒருபக்கம் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதனிடையே, சக்திவேல் அவரது தந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குழந்தைவேலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கும் போதே உயிரிழந்ததாகவும் செய்தி பரப்பப்பட்டு வந்தன.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைவேலு உடல்நிலை தேறிய நிலையில், தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையை தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்து விட்டு, டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து, இரண்டு நாட்களில் உள் தாழிட்ட நிலையில் அவரது அறையில் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
மேலும், குழந்தைவேலுவின் மனைவி ஹேமாவும், தனது கணவர் இறப்பில் சந்தேகம் இல்லை என, கைகளத்துார் போலீசில் எழுதி கொடுத்துள்ளார். இதனால், இந்த வழக்கு முடிவுக்கு வந்து விடும் என்று எண்ணிய சக்திவேலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் எஸ்.பி சியாமளாதேவியிடம் பேசியபோது, “ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் பழனிசாமி என்பவர் சரியாக விசாரிக்காததால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த வழக்கை மறு விசாரணை செய்யவும், மருத்துவ பரிசோதனையை மீண்டும் ஒருமுறை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறினார்.
இதனிடையே, சொத்து பிரச்னையில் தந்தையை அவர் தாக்கும் வீடியோ நேற்று சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து, சேலம் மாவட்ட எஸ்.பி., அருண்கபிலன் உத்தரவுபடி, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில், ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஆத்துாரில் இருந்த சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.
சொந்த பந்தங்களை விட சொத்துதான் முக்கியம் என்று குடும்பத்தினரை துச்சமென கருதி, ஈவு இரக்கமில்லாமல் நடப்போருக்கு, சக்திவேலுக்கு கொடுக்கும் தண்டனை சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.