இடைத்தேர்தலில் களமிறங்கும் பொன்முடி மகன்…? ஆயத்தமாகும் அதிமுக, பாஜக..!
Author: Babu Lakshmanan1 May 2024, 9:24 pm
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் புகழேந்தி கடந்த மாதம் 6ம் தேதி திடீரென மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக உள்ளது.
அங்கு ஜூன் 1ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. இருந்தபோதிலும் கோடை வெயில் கடுமையாக இருப்பதால் அன்று தேர்தலை நடத்த வேண்டாம், அரசியல் கட்சிகளால் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட முடியாது, மக்களும் வாக்களிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதனால்
இன்னும் ஓரிரு மாதங்கள் கழித்து தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்று ஒரு நியாயமான கோரிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வைத்திருக்கிறார்.
மேலும் படிக்க: தென்தமிழகத்தில் நிலவும் வறுமை… உயிர்களை துச்சமாக மதிக்கும் திமுக அரசு ; கிருஷ்ணசாமி கடும் குற்றச்சாட்டு..!!
இதைத் தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது ஜூன் 1ம் தேதியே தேர்தலை நடத்தி விடுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது. ஏனென்றால் ஜூன் 1ல் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனில் மே 7ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வது தொடங்கப்பட்டு விடவேண்டும்.
அதேநேரம் விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருக்கிறது என்ற தகவலை தமிழக சட்டப்பேரவை செயலகம் புகழேந்தி மரணம் அடைந்த அடுத்த ஒரு சில தினங்களிலேயே தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்தும் விட்டது. இது ஜூன் 1ம் தேதியே தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்பதற்கான ஆதரவு நிலைப்பாடு தான்.
இந்த நிலையில் புகழேந்தி மறைந்த சோகத்திலேயே திமுக தலைமை தொடர்ந்து மூழ்கி விடாமல் இடைத்தேர்தல் பற்றிய சிந்தனையிலும் இறங்கிவிட்டது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைச்சர் பொன்முடி கடந்த இரண்டு வாரங்களாகவே வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் அவர் சிபாரிசு செய்கிற நபரைத்தான் வேட்பாளராக அறிவிப்பார் என்பது வெளிப்படையாக தெரியும் ஒன்று.
இந்த நிலையில்தான் புகழேந்தியின் மகன் செல்வகுமார் அல்லது மருமகள் பிரசன்னா தேவியை போட்டியிட வைக்கலாம் என்று உள்ளூர் திமுக நிர்வாகிகள் பொன்முடிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். செல்வகுமாரின் மனைவி பிரசன்னா தேவி விழுப்புரம் மாவட்டத்தின் ஒன்றிய குழு தலைவராக பதவி வகித்தவர். அதனால் கட்சி வட்டாரத்தில் அவருக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. மேலும்
மறைந்த புகழேந்தி அமைச்சர் பொன் முடியின் நெருங்கிய நண்பரும் ஆவார். அதனால் மகன், மருமகள் இரண்டு பேரில் யாராவது ஒருவர் ஒப்புக்கொண்டால் அது குறித்து கட்சித் தலைமைக்கு தெரிவிக்கிறேன் என்று அவர் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் அவரிடம் இன்னொரு வருத்தமும் உள்ளது. சீனியர் அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்துக்கு வேலூரில் போட்டியிட மீண்டும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்து விட்டார். இன்னொரு சீனியர் அமைச்சரான கே என் நேரு, தனது மகன் அருணுக்கு பெரம்பலூர் தொகுதியை வாங்கி விட்டார்.
ஆனால் நமது மகன் கௌதம சிகாமணிக்கு மீண்டும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியை ஸ்டாலினிடம் கேட்டு வாங்க முடியாமல் போய்விட்டதே என்ற மன வருத்தம் பொன்முடியிடம் நிறையவே உண்டு என்கிறார்கள்.
அதனால் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியை கௌதம சிகாமணிக்கு, எப்படியும் வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என்று அவர் தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதைப் புரிந்து கொண்ட அவருடைய ஆதரவாளர்களும் கௌதம சிகாமணியின் பெயரை பரிசீலிக்க வேண்டும் என்று அறிவாலயத்திற்கு விருப்ப கடிதங்களை குவித்து வருகிறார்களாம்.
தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் எம்எல்ஏவாக சட்டப்பேரவையில் இருக்க முதலமைச்சர் ஸ்டாலின் விரும்ப மாட்டார் என்று கூறப்படுவதை பொன்முடியின் ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். காரணம், அமைச்சர் ஐ பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். அவருடைய மகன் செந்தில்குமாரோ பழனி தொகுதியின் எம்எல்ஏவாக பதவி வகிக்கிறார். அப்படி இருக்கும்போது கௌதம சிகாமணி போட்டியிட வாய்ப்பு வழங்குவதில் எந்த தவறும் கிடையாது என்ற வாதத்தையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.
அதிமுக சார்பில் 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்ச் செல்வத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இவர் 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தியிடம் ஒன்பதாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தோல்வி கண்டார். இந்த தொகுதியில் அதிமுகவுக்கு எப்போதுமே வலுவான வாக்கு வங்கி உண்டு. அதனால் இவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல விக்கிரவாண்டி அதிமுக ஒன்றிய செயலாளர் பன்னீர் மற்றும் முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகி லட்சுமி நாராயணன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் பரிந்துரை செய்யும் நிர்வாகிக்குத்தான் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவருடைய முடிவே இறுதியானதாக இருக்கும் என்கிறார்கள்.
இதனை உறுதிபடுத்தும் வகையில் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு இடைதேர்தலில் யாருக்கு வாய்ப்பு அளித்தால் எளிதில் வெற்றி பெறலாம் என ஆலோசிக்கப்பட்டது. அப்போது தொகுதியில் சாதிவாரியாக வாக்காளர்கள் விவரம் மற்றும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கடைசி வரை அதிமுக கூட்டணியில் சேர்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தி விட்டு கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததால் அந்தக் கோபமும் சி வி சண்முகத்திடம் நிறையவே உள்ளது. அதனால் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக அல்லது பாஜக சார்பில் யார் நிறுத்தப்பட்டாலும் அவர்களைவிட மிக அதிக வாக்குகள் பெற்று தொகுதியை கைப்பற்றி
விட வேண்டும் என்கிற உத்வேகமும் அவரிடம் உள்ளது.
அதேநேரம் விக்கிரவாண்டியில் வலுவான வாக்கு வங்கியை கொண்ட பாமக, கூட்டணி தர்மம் கருதி பாஜகவுக்கு இத் தொகுதியை விட்டுக் கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இருந்த முகையூர் சட்டப் பேரவை தொகுதியில் இருமுறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.ஜி சம்பத், தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக் கட்சியில் இருந்து விலகி கடந்த 2021 ஆண்டு முதல் பாஜகவில் உள்ளார். அவர் தனக்கே தொகுதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், இரண்டு வாரங்களுக்கு முன்பே தீவிர தேர்தல் களப்பணிகளில் இறங்கியும் விட்டார். மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதல் இன்றி அவர் தேர்தல் வேலைகளில் இறங்குவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்.
மேலும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கருக்காக சூறாவளியாய் சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் ஏ. ஜி சம்பத் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் போட்டியிட்டால் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, அதிமுக இடையேயான
நேரடி போட்டி என்ற நிலை மாறி அது பலத்த மும்முனை போட்டியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “ஆளும் கட்சியான திமுக விக்கிரவாண்டியில் ஜூன் 1ம் தேதியே, தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் கட்சியின் உண்மையான பலத்தை அறிந்து கொள்வதற்காகத்தான்.
ஏனென்றால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த போது வாக்காளர்களைப் பட்டியில் அடைத்து அவர்களை சிறப்பான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி திமுக அரசுக்கு இருந்தது. அங்கு காங்கிரஸ் சார்பில்
ஈ வி கே எஸ் இளங்கோவனை அத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவதற்கு அக் கட்சியின் மேலிடத்திடம் பரிந்துரை செய்ததே முதலமைச்சர் ஸ்டாலின்தான். தவிர அங்கு காங்கிரஸ் 66 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, திமுகவின் பணபலம் காரணமாகத்தான் என்பது ஊரறிந்த ரகசியம்.
அந்தத் தேர்தலுக்காக 300 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்ததாக எதிர்க்கட்சிகள் அப்போது திமுக மீது குற்றச்சாட்டை வைத்தன. மேலும் அன்று மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் கை வண்ணத்தையும் அந்தத் இடைத் தேர்தலில் காண முடிந்தது.
விக்கிரவாண்டியில் தேர்தலை இன்னும் சில மாதங்கள் கழித்து நடத்தினால் அப்போது சில நூறு கோடி ரூபாய்களை செலவு செய்ய வேண்டிய நெருக்கடி மீண்டும் திமுகவுக்கு ஏற்படலாம். அதனால் தான் ஜூன் 1ம் தேதியே தேர்தலை நடத்தலாம் என்று திமுக அரசு கிரீன் சிக்னல் காட்டிவிட்டது.
மேலும் ஈரோடு கிழக்கில் இறக்கிய அதே பண பலத்தின் மூலம் மீண்டும் வெற்றி பெறுவதை இந்த முறை திமுக விரும்பவில்லை. ஏனென்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வந்துவிடும். அப்போது கள நிலவரம் எப்படி இருக்கும் என்று யாராலும் உறுதியாக கூற முடியாது. அதனால் தான் கட்சியின் உண்மையான பலத்தை அறிந்து கொள்வதற்காக ஜூன் 1ம் தேதியே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்த திமுக விரும்புகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கவே செய்கிறது!