காவிரி பிரச்சனையால் திமுக கூட்டணி டமார்?…. காங்கிரசை கண்டிக்கும் வைகோ; பதுங்கும் திருமா!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 9:12 pm

காவிரி பிரச்சனையால் திமுக கூட்டணி டமார்?…. காங்கிரசை கண்டிக்கும் வைகோ; பதுங்கும் திருமா!

காவிரி நீர் பங்கீடு பிரச்சனையும், மேகதாதுவில் அணைக்கட்டும் விவகாரமும் விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தடுமாற்றத்துடன் ஆளுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுப்பது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக இண்டியா கூட்டணியில் உள்ள திமுக, அதே கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு எதிராக மென்மையான போக்கை கையாளுவது வெளிப்படையாகவே தெரிகிறது. தமிழக காங்கிரஸோ கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவியாய் தவிக்கிறது.

மேலும் படிக்க: பெண்ணிடம் தாலியை பறித்து மின்னல் வேகத்தில் பறந்த கொள்ளையர்கள்.. கரும்பு தோட்டத்தில் SHOCK.. CCTV காட்சி!

நாடாளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தலின்போது, கர்நாடகாவுக்கு சென்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த விசிக தலைவர் திருமாவளவனோ இந்த விவாகாரத்தை கண்டுகொள்ளாமல் அப்படியே ஒதுங்கிக் கொண்டு விட்டார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மட்டும் கர்நாடக காங்கிரசை ஆக்ரோஷமாய் கண்டிக்கிறார். ஆனால் பெரும்பாலான டிவி செய்தி சேனல்களும் முன்னணி நாளிதழ்களும் அதற்கு முக்கியத்துவம் தருவதே இல்லை.

இந்த நிலையில்தான், டெல்லியில் கடந்த 30 ம் தேதி காணொலி வாயிலாக நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், கர்நாடக தரப்பில் எங்கள் மாநிலத்தில் குடிநீர் தேவைக்காக மட்டும் அணைகளில் நீர் உள்ளது. அதனால் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று மறுத்துவிட்டது.

இதனால் மே மாதத்துக்கான நீரின் அளவான 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெறுவதில் சிக்கல் முளைத்துள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும், கர்நாடக அரசு திறக்கவில்லை. என்றைக்காவது கர்நாடக அரசு நாங்கள் தண்ணீர் திறந்து விடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை. அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். குறைவாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். காவிரி ஒழுங்காற்று குழு தண்ணீரை திறந்து விடுமாறு கூறியும் திறக்க மாட்டேன் என்று கர்நாடக அரசு கூறுகிறது.

ஆகையால் மத்திய அரசை கர்நாடக அரசு மதிக்காமல் இருக்கிறது. இதில் கேள்வி கேட்க வேண்டியது சுப்ரீம் கோர்ட்டுதான். எனவே காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்”என்று குறிப்பிட்டார்.

அதே நேரம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கண்டனம் அனல் பறப்பதாக இருந்தது.

“காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா பேசும்போது, “மே மாதத்தில் திறக்க வேண்டிய 2.5 டிஎம்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீரை மட்டும் கர்நாடகா திறக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கக்கூடிய நிலையில் கர்நாடகாவின் நீர் நிலைமை இல்லை” என்று கூறி இருக்கிறார்.

கர்நாடகாவின் கருத்தையே ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வழிமொழிந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப்படுத்தி காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஏனென்றால் காவிரியில் நீர் நாம் கேட்பது நமது உரிமை. பிச்சை அல்ல. இதற்காக காங்கிரசை எதிர்க்கவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று கொந்தளித்தார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையோ அல்லது கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து
தீவிர பிரச்சாரம் செய்த விசிக தலைவர் திருமாவளவனோ இது பற்றி வாய் திறக்கவே இல்லை. இதேபோல மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த விவகாரத்தை கண்டு கண்டதாகவே தெரியவில்லை.

ஒருவேளை காவிரி பிரச்சனைக்காக குரல் எழுப்பினால், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டி வந்துவிடுமோ என்று அவர்கள் மௌனமாகி விட்டார்களா? எனத் தெரியவில்லை.

இத்தனைக்கும் சித்தராமையா, எங்கள் மாநிலத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் காவிரியில் எங்களால் தண்ணீர் திறந்து விட முடியாது என்று அண்மையில் பகிரங்கமாக அறிவித்தவர். டி கே சிவகுமாரோ, மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ராகுல் காந்தியின் அனுமதி பெற்று காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று அதிரடி காட்டியவர். அப்படி இருந்தும் கூட அவர்கள் இருவருக்கும் திருமாவளவன் சால்வை அணிவித்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,10 நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரையும் சந்தித்து பேசிய திருமாவளவன், அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க காங்கிரசுக்காக தீவிர பிரச்சாரமும் செய்தார். அப்போதும் கூட தமிழகத்திற்கு காவிரியில் உங்களால் முடிந்த அளவுக்கு தண்ணீரை திறந்து விடுங்கள் என்று மறந்தும் அவர் கூறவில்லை.

இதற்கு முக்கிய காரணம் கடந்த மார்ச் மாதம் கர்நாடகாவில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் விசிக போட்டியிடும் என்று திருமாவளவன் அறிவித்தபோது காவிரி விவகாரம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறிய பதில் மிகவும் வேடிக்கையாக இருந்தது.

“காவிரி பிரச்சனையில் தமிழக விசிகவின் நிலைப்பாடு கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது தான். ஆனால், கர்நாடகாவில் உள்ள விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு என்பது கர்நாடக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பதாகத்தான் இருக்கும். காவிரி விவகாரத்தில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை விசிகவுக்கு உள்ளது. காவிரி பிரச்னைக்கு இறுதித் தீர்வு என்பது மத்திய அரசுதான் எடுக்க வேண்டும்” என்று விசிகவுக்கும், காவிரி பிரச்சனைக்கும் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை என்பதுபோல நழுவிக் கொண்டார்.

இப்படி காவிரி விவகாரத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆளுக்கொரு விதமாக கருத்து தெரிவிப்பது 2026 தமிழக தேர்தலில் காவிரி நீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தால் அது டெல்டா மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் தலைவலியாகவே அமையும். அப்போது இந்த கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிக கழற்றிவிடப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

இது குறித்து காவிரி நீர் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகளின் மனக்குமுறல் இதுதான்: “கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவின்படி தண்ணீரை திறந்து விடுவதே இல்லை. அந்த மாநில அணைகள் கனமழையால் நீர் நிரம்பி வழியும் போதுதான் போனால் போகிறது என்று சிறிதளவு தண்ணீரை திறந்து விடுவார்கள். அப்போது மட்டும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை நாங்கள் மதித்து நடக்கிறோம் என்று பெருமையோடு கூறியும் கொள்வார்கள்.

காவிரி நீர் பிரச்சனை காரணமாகத்தான் கர்நாடகாவில் திமுக, அதிமுக கட்சிகளின் கிளை இருந்தும் கூட நாடாளுமன்ற மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களின் போது
அந்த மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் நலன் கருதி சமீப காலமாக தங்கள் கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்தாமல் அவை தவிர்த்து வருகின்றன. அதுபோன்ற நிலையில் திருமாவளவன் மட்டும் எதற்காக கர்நாடகாவில் விசிகவை தொடங்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஏதோ ஆதாயத்தை எதிர்பார்த்துதான் அவர் இதைச் செய்கிறாரோ என்ற சந்தேகமும் வருகிறது.

இங்கே இன்னொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிக்கவேண்டும். காவிரி நீர் பங்கீடு என்றாலும் சரி, மேகதாது அணை விவகாரம் என்றாலும் சரி கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தங்களது கருத்தை ஊடகங்களில் பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் மட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு நேரடியாக பதிலளிப்பதே இல்லை. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்தான் உச்சநீதிமன்றம் செல்வோம் என்று அவ்வப்போது சொல்கிறார். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நழுவிக் கொள்ளாமல் வெளிப்படையாக தமிழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் கர்நாடகத்துடன் அவர் மென்மையான போக்கை கடைப்பிடிக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிய வரும். இல்லையென்றால் இண்டியா கூட்டணியில் பிரதான கட்சியாக காங்கிரஸ் இருப்பதால் சோனியா, ராகுல் காந்திக்காக காவிரி நீர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அடக்கியே வாசிக்கிறார் என்றுதான் கருதத் தோன்றும்” என அந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

திமுக அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 291

    0

    0