நள்ளிரவில் இருவீதியைச் சேர்ந்த பெண்கள் மோதல்… போதை ஆசாமிகளால் போர்க்களமான குடியிருப்பு பகுதி… ; கோவையில் பரபரப்பு!!!
Author: Babu Lakshmanan4 May 2024, 12:11 pm
கோவையில் போதை ஆசாமிகள் தகராறில் இரு வீதி ஆண்களும், பெண்களும் மோதிக் கொண்ட பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள பொங்கி அம்மாள் வீதியில் இரவு நேரங்களில் அங்கு உள்ள ஒரு வீட்டின் அருகே போதை ஆசாமிகள், கஞ்சா மற்றும் மது குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு தயரிட்டேரி மற்றும் கக்கன் வீதியைச் சேர்ந்த சிலர், அங்கு வந்து அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர். அதில் ஒருவரின் மனைவி கணவனை அழைக்க வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கணவன் மது அருந்துவதை பார்த்த அவர், என்ன என் கணவரை மது அருந்த கற்றுக் கொடுக்கிறீர்கள் ? என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கணவன் – மனைவி இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அந்த இரண்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள், பொங்கி அம்மாள் வீதிக்கு வந்து கற்கள், கட்டைகளால் வீசி ஒருவரை, ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ரத்தினபுரி காவல் துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், காவல்துறை வந்து சமாதானப்படுத்தியதை பொருட்படுத்தாமல் இரு தரப்பினர் மாறி, மாறி மோதி கொண்டு சம்பவம் அரங்கேறியது. இரு வீதிகளைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே கடும் சண்டையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: EPS-ஐ பார்த்து கத்துக்கோங்க.. இது கசப்பான மருந்து.. திமுகவுக்கு பூஜ்யம் மதிப்பெண் தான் ; ஆர்பி உதயகுமார்!!
பின்னர் இரு தரப்பினரையும் காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்க காவல் துறையினர் அறிவுறுத்தினர். பின்னர் அங்கிருந்த கூட்டத்தினரை அப்புறப்படுத்திய காவல் துறையின் அங்கு இருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.