சிறுமியை நாய் கடித்த விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ; சென்னை மாநகராட்சி ஆணையர்!!
Author: Babu Lakshmanan6 May 2024, 2:45 pm
கால்நடையினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு நிரந்தர தீர்வை பெறுவோம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து சென்னை பெருநகர மாநகராட்சி ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மேலும் படிக்க: காங்., பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை : 8 தனிப்படைகள் அமைப்பு..!!
மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- சென்னை மாநகராட்சியில் உள்ள 35 மேல்நிலைப் பள்ளிகளில் 4,998 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவற்றில் 4355 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மொத்தம் 87.13 தேர்ச்சி சதவீதம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி 0.27 சதவீதம் அதிகரித்துள்ளது.
56 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவி பூங்கோதை பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 578 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பிடித்த முதல் 10 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். வரும் காலங்களில் தனி கவனம் செலுத்தி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மாநகராட்சி சார்பில் வழிவகை செய்யப்படும்.
சென்னையில் நாய் கடித்ததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் வளர்ப்பதற்கு உரிமையாளரிடம் முறையான நாய் உரிமம் (லைசென்ஸ்) இல்லை. 23 வகை நாய்களை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது. அதில் ஒரு வகை தான் ராட்வில்லர் வகை நாய். அதற்கு தற்காலிக தடை நீதிமன்றம் விதித்துள்ளது.
கால்நடை துறையிடம் சேர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வீட்டில் வளர்க்க முறையான அனுமதி பெறவில்லை. விலங்குகள் நல வாரியம் சார்பில் கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளது. இனப்பெருக்கம் செய்யக்கூடாது என தடை உள்ளது. உயர்நீதிமன்றம் சென்று கால்நடை பாதிப்பு குறித்து முறையிட உள்ளோம்.
சென்னை மாநகராட்சி சார்பில் நாய் உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கால்நடையினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு அதற்கான விளக்கத்தை பெறுவோம். தற்பொழுது நாயை பிடிக்க முடியாது. பல்வேறு சட்ட சிக்கல்கள் இருக்கிறது. இதுகுறித்து கலந்தாலோசித்து நீதிமன்றத்தில் முறையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு எடுக்கப்படும். சென்னையில் அடுத்த 3 நாட்களில் பத்து இடங்களில் கிரீன் செல்டர் (நிழல் பந்தல்) போக்குவரத்து காவல்துறையினர் ஒப்புதலுடன் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
199 புதிய இடங்களில் குடிநீர் வசதிக்கான பந்தல் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதுவரை 297 இடங்களில் 37,029 ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் மருத்துவ கண்காணிப்பு அலுவலர் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் வளர்ப்பு நாய்கள் வளர்க்க வேண்டும் என்றால் முறையாக லைசன்ஸ் கட்டாயம் பெற வேண்டும். நாய்களுக்கு அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும்.
சிறுமியை கடித்த நாயை பிடிப்பதற்கு இப்போது வாய்ப்பில்லை. ராட்வீலர் வகை நாயை வளர்க்ககூடாது என்று மத்திய அரசின் உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, இதில் உள்ள சட்ட சிக்கல்களை பார்த்துவிட்டு கால்நடை மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே, முடிவு செய்யப்படும். வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பவர்கள் முறையாக பதிவு செய்ய வேண்டும் இல்லையென்றால் நோட்டீஸ் வழங்கப்படும்.
தேர்தல் பணிக்காக 1246 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். வருகிற 28ம் தேதியன்றி ரேண்டமைசேஷன் தேர்தல் நடத்தும் அதிகாரி நடத்துவார். பின்னர், ஜீன் 03ம் தேதியன்று பார்வையாளர்கள் முன்னிலையில் ரேண்டமைசேஷன் நடைபெறும். பின்னர், இறுதியாக வாக்கு எண்ணும் நாளன்று காலை ஐந்து மணிக்கு ரேண்டமைசேஷன் நடைபெறும்.
சென்னை மூன்று நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 584 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.