மா.செ.க்கள் அதிகாரத்தை குறைக்க முடிவு…? உதயநிதியால் அமைச்சர்கள் பீதி!
Author: Babu Lakshmanan6 May 2024, 9:14 pm
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களில் சிலர் திமுகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட
18 தொகுதிகளில் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை, அவர்களது சுணக்கம் காரணமாக 15 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்படும் தமிழக உளவுத்துறையின் ரகசிய சர்வேயின் அறிக்கையால் திமுக தலைமை ரொம்பவே அதிர்ந்துதான் போயிருக்கிறது.
குறிப்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், அவருடைய மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகிய மூவரும்
சற்று பதற்றத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ‘பணத்தை கேட்டால் புடவையை புடுச்சு இழுக்கிறான்’… சீட்டு நடத்தி லட்சங்களை சுருட்டிய விஜய் கட்சி நிர்வாகி அடாவடி..!!
ஏனென்றால் தேர்தல் ஓட்டுப் பதிவுக்கு பின்பு எடுக்கப்பட்ட ரகசிய சர்வேயில் தொகுதி வாரியாக மாறி விழுந்த சாதிய ஓட்டுகளை மிக நுணுக்கமாக அலசி ஆராய்ந்துபோது கடைசி நேரத்தில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கிடைக்க வேண்டிய வாக்குகளில் 2 முதல் 4 சதவீதம் வரை அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை நோக்கி திரும்பி இருப்பது தெரியவந்துள்ளதுதான்.
குறிப்பாக அதிமுக கூட்டணிக்கு விழுப்புரம், விருதுநகர், ஈரோடு, பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சி, மதுரை, கரூர், நாமக்கல், திருப்பூர், தென்சென்னை ஆகிய 10 தொகுதிகளிலும், பாஜக கூட்டணிக்கு நெல்லை, தென்காசி, தர்மபுரி, ராமநாதபுரம், வேலூர் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு முன்பு எடுக்கப்பட்ட சர்வேயை விட நான்கு சதவீத ஓட்டுகள் கூடுதலாக கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மயிலாடுதுறை தொகுதியை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் 14 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவார் என்றும் அவர் எவ்வளவு ஓட்டுகளை வாங்குகிறார் என்பதை பொறுத்தே அத்தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றுமா? அல்லது அதிமுக வெற்றி பெறுமா? எனக் கூற முடியும் என்ற தகவலும் அந்த ரகசிய சர்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, என்கிறார்கள்.
இந்த நிலையில்தான் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்குப் பின்னர் ஓய்வுக்காக கொடைக்கானல் சென்ற ஸ்டாலின் அங்கு ஐந்து நாட்கள் ஓய்வெடுத்தார். அப்போது தமிழக அமைச்சரவையில் நடத்த வேண்டிய மாற்றம், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவைக்கு யார் யாரை அனுப்புவது என்பது தொடர்பாக ஆலோசனைகளும் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின.
இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் மருமகன் சபரீசன் ஆகியோரும் கொடைக்கானல் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உதயநிதியோ, ஸ்டாலின் கொடைக்கானல் சென்ற பின்னர் தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு லண்டன் நகருக்கு போய் விட்டார்.
இதனால் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளாத 6 அமைச்சர்கள் மீதும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுத்தப்பட மாட்டாது எனத் தெரியவந்துள்ளது.
அதேநேரம் இந்த 6 பேருக்கும் பலத்த ஷாக் அளிக்கும் விதமாக இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது.
தற்போது திமுகவில் உள்ள 72 மாவட்ட செயலாளர்களில் 20 பேர் அமைச்சர்களாகவும் உள்ளனர். இவர்களில் சரி பாதி பேர் சீனியர் கேட்டகிரியில் இருப்பவர்கள். இதில் குறிப்பாக ஆறு சீனியர் அமைச்சர்கள் உதயநிதியை அவ்வளவாக மதிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த அமைச்சர்களின் தயவில் மாவட்டச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் உதயநிதி சொல்வதை அப்படியே கேட்டு நடப்பதில்லை என்ற ஆதங்கமும் உள்ளூர் திமுக நிர்வாகிகளிடம் காணப்படுகிறது.
அதேநேரம் திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதிக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் முதல் அனைத்து மட்ட நிர்வாகிகளும் தனி மரியாதை கொடுக்கின்றனர். என்றபோதிலும் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதிதான் என்பதில் திமுகவில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லாத நிலையில் இப்போதைக்கு துணை முதலமைச்சர் பதவியோ, தலைமைக் கழக பதவியோ வேண்டாம் என்பதில் உதயநிதி உறுதியாக இருக்கிறார்.
இதுதான் சீனியர் அமைச்சர்களுக்கும், அவர்களது ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கும் ரொம்பவும் வசதியாகப் போய்விட்டது. உதயநிதியின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் இது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றால், அதை சீனியர் அமைச்சர்கள் எப்படியாவது தடுத்து நிறுத்தி விடுகிறார்களாம்.
அதனால் கட்சியில் அந்தந்த பகுதிகளில் அதிகார மையமாக திகழும் மாவட்டச் செயலாளர் பதவிகளில் தனக்கான நபர்களை உட்கார வைக்கவேண்டும் என்பதில் அமைச்சர் உதய நிதி மிகவும் உறுதியாக இருக்கிறார். இளைஞரணி நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்களாக்கும் முயற்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பே உதயநிதி இறங்கினார். ஆனால் சீனியர் அமைச்சர்களோ எந்த வகையில் அதை தடுக்கவேண்டுமோ அப்படி தடுத்து தங்களது அதிகார மையங்கள் சுருங்காமல் பார்த்துக் கொண்டனர்.
இப்படியே போனால் 2026 தமிழக தேர்தலின் போது திமுகவுக்கு சீனியர் அமைச்சர்களாலும், அவருடைய ஆதரவு மாவட்ட செயலாளர்களாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என்று உதயநிதி கருதுவதற்கு இடம் உண்டு. ஏனென்றால் அந்தத் தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் திமுகவுக்கு மிகப்பெரிய சவாலாக அமையலாம்.
என்றாலும் கூட 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றின்போது தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து பெரிய அளவில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த உதயநிதி, 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்று திடமாக நம்புகிறார்.
ஆனாலும் சில இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கும் பல தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் 6 சீனியர் அமைச்சர்களும், ஒன்பது மாவட்ட செயலாளர்களும் முழுமையான அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியாற்றவில்லை அதனால் தமிழகத்தில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியால் கைப்பற்ற முடியாமல் போகலாம் என்றும் உதயநிதியிடம் அவருடைய ஆதரவு மாவட்ட திமுக செயலாளர்கள் புகார் தெரிவித்திருப்பதாக தெரிகிறது.
இதே நிலை 2026 தேர்தலிலும் நீடித்தால் திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
எனவேதான் 2026 தமிழக தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே திமுகவின் அடுத்த முகமாக உதயநிதியை முன்னிலைப்படுத்த அக்கட்சியின் இளைஞர் அணியினர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இப்போதே அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்பது வெளிப்படை.
இதனால் அதிக சட்டப் பேரவை தொகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய மாவட்டச் செயலாளர்களின் அதிகார எல்லைகள் சுருக்கப்பட்டு அதில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு இளைஞரணி நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திமுகவில் இருக்கும் 72 மாவட்டங்களின் எண்ணிக்கையை 90 ஆக அதிகரிக்கச் செய்வதன் மூலம் சீனியர் அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்க எல்லை வெகுவாக சுருங்கி விடும் வாய்ப்புகள் அதிகம்.
இதனால் அமைச்சர் உதயநிதி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விடுவார் என்று அவருடைய ஆதரவு நிர்வாகிகள் உறுதியாக நம்புகின்றனர்.
“சம்பந்தப்பட்ட சீனியர் அமைச்சர்களின் மாவட்ட எல்லை அதிகாரமும், ஆட்டமும் குறையும்போது உதயநிதியின் ஆதரவு இல்லாமல் தங்களது தொகுதிகளில் தனி ராஜ்ஜியம் நடத்த முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதேபோல அவர்களுடைய ஆதரவு மாவட்டச் செயலாளர்களும் இனி திமுகவின் எதிர்காலம் உதயநிதியின் கைகளில்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளவும் செய்வார்கள். அதுதான் கட்சிக்கும் நல்லது” என்று உதயநிதியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அனேகமாக அமைச்சர் உதயநிதி லண்டனிலிருந்து திரும்பிய அடுத்த ஒரு சில நாட்களிலேயே இது பற்றிய அதிரடி முடிவை எடுப்பார் எனக் கூறப்படுகிறது. அவர் வருகிற 10ம் தேதியன்று சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் அந்த நாளை திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் உண்மை.
திமுகவில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!