திமுக ஆட்சியில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான்… போட்டுடைத்த துரை வைகோ…!!!
Author: Babu Lakshmanan7 May 2024, 2:33 pm
பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பாஜக பேசி வருவது தோல்வி பயத்தால் தான் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கோடை கால நீர் மோர் பந்தலை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ திறந்து வைத்தார். இதில் மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோரை வழங்கினர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமைக் அலுவலகமான தாயகம் வாசலில் கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
தொடர்ந்து, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு, “திருச்சியிலும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் லட்சக்கணக்கான மக்களை நான் சந்தித்து பேசினேன். அப்போது, நான் கூறும் பொழுது திமுக ஆட்சி மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக எந்த சூழ்நிலையில் ஆட்சி பொறுப்பை ஏற்றார்கள். கோவிட் தொற்றின் இரண்டாம் அலை மற்றும் நிதி பற்றாக்குறை இருந்தது, அதையும் மீறி இவ்வளவு விஷயங்களை செய்திருக்கிறார்கள்.
ஒரு கோடி பதினாறு லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறார்கள். நகர பேருந்துகளில் இலவச பயணம், சாதாரண பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு உயர்கல்வி செல்லும் பொழுது புதுமைப்பெண், தமிழ் பெண் திட்டம் மூலமாக பல ஆயிரம் கணக்கான ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்லூரி சென்று படிக்கிறார்கள். அதே போல, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் இப்படி நிறைய விஷயங்கள் கடுமையான நிதி நெருக்கடிகளிலும் அவர்கள் செய்திருக்கிறார்கள்.
ஒரு சில பிரச்சினை இருக்கிறது, மறுக்கவில்லை. இந்த சில விஷயங்கள் எதனால் செய்ய முடியவில்லை என்று பார்க்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்ட நிதி பற்றாக்குறை யாரால் ஏற்படுத்தப்பட்டது, யார் காரணம் என பார்க்க வேண்டும். திமுக அரசு எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் சிறப்பான ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிதி பற்றாக்குறைக்கு காரணம் மத்திய அரசு தான். எதிர்க்கட்சியை பொறுத்தவரைக்கும் ஏதோ ஒரு வகையில் குற்றம் சொல்ல வேண்டும் என்றும், அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பேர் உருவாக்க வேண்டும் என்று கூறி பேசி வருகிறார்கள். தமிழகத்தில் முதலமைச்சர் தளபதி அவர்கள் சிறப்பான ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்,” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: ‘வெப்பநிலை செய்தி’ போல… அடிக்கடி வரும் உயிரிழப்பு செய்திகள் ; நிரந்தர தீர்வுக்கு இதுதான் வழி… தமிழக அரசுக்கு வானதி யோசனை!!
பிரதமர் மோடியை பொருத்தவரை தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே 400 இடங்களில் வெற்றி பெறும் என கூறி வருகிறார். நோட்டாவை விட மோசமாக ஓட்டு வாங்கக்கூடிய ஒரு வேட்பாளரை தான் நிறுத்தி இருக்கிறார்கள். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதுவரை நடைபெற்ற இரண்டு கட்ட தேர்தலிலும், இன்று நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலிலும், இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வட மாநிலங்களான மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தானில் நல்ல தீர்வு வரும் என தகவல் வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம், என கூறினார்.
இந்திய கூட்டணி அமைப்பதற்கு முன்பாகவே இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கும் பொழுது ராகுல் காந்தி தான் என கூறினேன். இந்திய கூட்டணி அமைந்த பிறகும் நான் அதை கூறினேன். அவருக்காக தான் நாங்கள் ஓட்டு கேட்டோம். தேர்தல் பரப்புரையின் பொழுது, ஒரு மாற்றம் வரவேண்டும் எனவும், தமிழக அரசு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் எனவும், நிதிபற்றா குறையை சரி செய்ய வேண்டும் எனவும், மோடிக்கு பதில் ராகுல்தான் வரவேண்டும் என எல்லா இடங்களிலும் கூறி இருக்கிறேன்.
எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்கள் அனைவரும் இந்திய கூட்டணிக்கு ஓட்டு போடும்போது ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று தான் ஓட்டு போட்டார்கள். இந்திய கூட்டணி மீது குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என பாஜக பேசி வருகிறது. இந்திய கூட்டணி வெற்றி பெறும் பொழுது ராகுல் தான் பிரதமராக வரப்போகிறார், என கூறினார்.
கடந்த பத்து வருடங்களாக பாஜக கொடுத்த வாக்குறுதியான ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் கொடுப்போம் என கூறினார்கள். 10 வருடத்தில் 20 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும். அதேபோல பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என கூறினார்கள். இன்று சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கு சென்று விட்டது. மேலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது, 72 டாலர் பீப்பாய் தான் வாங்குகிறது. 25 விழுக்காடு கச்சா எண்ணெய் விலை குறைந்து இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே பெட்ரோல் டீசல் விலையை குறைத்து இருக்க வேண்டும் ஆனாலும் குறைக்காமல் உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் மூன்று ஆண்டுகளில் என்ன செய்தோம் என்பதை கூறி தான் வாக்கு சேகரித்தோம். பாஜக 10 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோமா என்பதை பற்றி பேசவில்லை. அதற்கு மாற்றாக, மத ரீதியாக, ஜாதி ரீதியாக தவறான ஒரு தேர்தல் பரப்புரையை செய்து வருகின்றனர். பாஜகவை தோற்கடிக்க வெளிநாட்டு சதி செய்வதாக ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அதேபோல, இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் தான் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்கள். தோல்வி பயத்தால் தான் அவர்கள் இப்படி பேசி வருகிறார்கள்.
இந்தியா பல மதங்கள் ஜாதிகள் மொழிகளைக் கொண்ட நாடு. ஒரு பிரதமராக இருப்பவர், பிரதமராக வரவேண்டி அதற்கு முயற்சி செய்பவர் மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்பாக இருந்த பிரதமர்கள் இப்படி பேசியதில்லை.
திருச்சியில் வாக்கு இயந்திரம் வைத்துள்ள இடங்களை தொடர்ந்து கண்காணித்து விருகிறோம். சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்திருக்கிறது. இதை பார்க்கும் பொழுது விழிப்புணர்வோடு இருக்கிறோம். பாஜகவை பொருத்தவரை வெற்றி பெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். மதரீதியாகவும், இதுபோல குறுக்கு வழியில் அவர்கள் செய்யக்கூடியவர்கள். நம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், என தெரிவித்தார்.