சினிமாவை மிஞ்சிய சம்பவம்… ரூ.12 கோடி அபேஸ் செய்த தம்பதியை கடத்திய கும்பல்… விசாரணையில் வெளிவந்த கிரஷர் கம்பெனி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
10 May 2024, 2:46 pm

ஊத்தங்கரை அருகே ஜல்லி கிரஷர் கம்பெனியில் ஆண் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் அடுத்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி பகுதியில் செல்வி குமரேசன் என்பவர் ஜல்லி கிரஷர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில், சென்னை குன்றத்தூர் பகுதி சார்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் வேலை வாங்கி தருவதாக கூறி, ஊத்தங்கரை அருகே உள்ள சுண்ணாலம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கணேசன் என்பவரிடம் சுமார் 12 கோடி அளவுக்கு பணம் பெற்று திருப்பி தராமல் இழுத்து அடித்து வந்துள்ளார்.

ஆசிரியர் கணேசன் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள நண்பர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்து கொடுத்ததாக தெரிய வருகிறது. இதைத்தொடர்ந்து, கணேசனிடம் பணம் கொடுத்தவர்கள் கணேசனுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மே5ம் தேதி வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் சேலம் வந்திருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்ற கணேசன், அவரது நண்பரான ஆணை மலையை சார்ந்த நித்தியானந்தம் மற்றும் ஊத்தங்கரை விக்னேஷ் ஆகியோரின் உதவியோடு, வெங்கடேசன் அவரது மனைவி லட்சுமி ஆகியோரை ஊத்தங்கரையில் உள்ள கிரஷர் கம்பெனிக்கு அழைத்து வந்து பணத்தைக் கேட்டு துன்புறுத்தி உள்ளனர்.

இதில் லட்சுமி இரண்டு நாட்களில் பணம் கொடுப்பதாகவும், இல்லையென்றால் தனக்கு சொந்தமான நிலம் சேலம் பகுதியில் உள்ளதாகவும், அதனை உங்களுக்கு கிரயம் செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு லட்சுமியை மட்டும் விடுவித்த கணேசன் மற்றும் நித்தியானந்தம், விக்னேஷ் ஆகியோர் வெங்கடேசனை பலமாக தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதனை அவரது மனைவிக்கு தெரியப்படுத்தாமல், சொத்தை கிரயம் பண்ணும் நோக்கத்தில், கணேசன், நிதியானந்தம், விக்னேஷ் ஆகியோர் சேலம் சென்றுள்ளனர்.

ஏற்கனவே சேலம் போலீசில் புகார் தெரிவித்து இருந்த லட்சுமி, கணேசன் மற்றும் அவனது கூட்டாளிகள் வருவதை போலீசாருக்கு தெரிவித்தார். சேலத்தில் வைத்து கணேசன் மற்றும் நித்தியானந்தன், விக்னேஷ் ஆகியோரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஐந்தாம் தேதி அன்று மாலை வெங்கடேஷ் என்பவரின் மகன் சந்தோஷ் குமார் குன்றத்தூர் காவல் நிலையத்தில் நிலம் சம்பந்தமாக சேலம் சென்ற தனது தாய், தந்தையர் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்திருந்தார். தொடர்ந்து சேலம் போலீசார் குன்றத்தூர் போலீசாரிடம் ஆசிரியர் கணேசன், நித்தியானந்தம், விக்னேஷ் மூவரையும் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க: ‘ரொம்ப கோபக்காரனே இருப்பாரோ’… நாய் கழுவிய தண்ணீர் வீட்டின் முன்பு வந்ததால் ஆத்திரம் ; பெட்ரோல் குண்டுவீசிய சிறுவன்..!!

குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வெங்கடேசன் இறந்துவிட்டதாகவும், அவரை தனது அண்ணி செல்விகுமரேசன் என்பவருக்கு சொந்தமான திப்பம்பட்டியில் உள்ள கிரஷர் கம்பெனியில் புதைத்து விட்டதாகவும் கூறியதை அடுத்து, ஊத்தங்கரை போலீசார் மற்றும் குன்றத்தூர் போலீசார் ஆசிரியர் கணேசனை நேரில் அழைத்து வந்து சம்பவ இடத்தில் ஜேசிபி எந்திரத்தின் மூலம் தோண்டி வெங்கடேசனின் உடலை கைப்பற்றினார்.

கைப்பற்றிய உடலை சம்பவ இடத்திலேயே ஊத்தங்கரை அரசு மருத்துவர்கள் டாக்டர் பிரவீனா, டாக்டர் சதீஷ் குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். ஊத்தங்கரை தாசில்தார் திருமால், வருவாய் ஆய்வாளர் கஜலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் நடைபெற்றது. சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 321

    0

    0