வடமாவட்டங்கள் மீது மட்டும் பாரபட்சம்.. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : திமுக அரசு மீது பாய்ந்த ராமதாஸ்!
Author: Udayachandran RadhaKrishnan10 May 2024, 4:56 pm
வடமாவட்டங்கள் மீது மட்டும் பாரபட்சம்.. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : திமுக அரசு மீது பாய்ந்த ராமதாஸ்!
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் பொதுத்தேர்வில் தோற்ற மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக்கூடாது. அடுத்த மாதமே துணைத்தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்று தேர்ச்சியடைந்து மேல்நிலை வகுப்பில் சேர வாழ்த்துகிறேன்.
மேலும் படிக்க: விஸ்வரூபம் எடுக்கும் சனாதன சர்ச்சை.. உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!
தேர்ச்சி விகிதங்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டும் வடக்கு மாவட்டங்கள் தான் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன என்பது கவலையும், வருத்தமும் அளிக்கிறது.
வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம்.
வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். இந்த இருகாரணங்களையும் மாற்ற வேண்டும் என்று தான் பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
ஆனால், சமூக நீதிப் பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத அரசு அதை செய்யவில்லை. இனியாவது வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தையும், பாகுபாட்டையும் கைவிட்டு, வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.