பஸ்ஸுக்குள் குடை பிடிக்க வேண்டிய நிலை… அரசு பேருந்தில் நனைந்தபடி பயணம் ; இருக்கையில் கூட அமர முடியாத அவலம்
Author: Babu Lakshmanan16 மே 2024, 10:40 காலை
மதுரையில் கனமழை பெய்த போது, அரசு பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் முழுவதுமாக நனைந்தபடி பெண்கள் பயணித்த சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பேருந்துகளில் உரிய பராமரிப்பு இல்லாத நிலையில் மழை நீர் பேருந்துக்குள் ஒழுகும் நிலை ஏற்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கழுவன்குளம் செல்லக்கூடிய அரசு பேருந்தில் முழுவதுமாக மழைநீர் பேருந்துக்குள் உள்ள இருக்கைகளில் வடிந்து கொண்டே இருந்ததால் பெண் பயணிகள் அமர முடியாத நிலையில் முழுவதுமாக நனைந்தபடி பயணிக்கும் நிலை உருவானது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: மண்டேலா கோட்பாட்டிற்கு எதிரானது… சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை!!
அந்த பேருந்தில் ஒரு பயணி கூட இருக்கையில் அமர முடியாத வகையில் பேருந்து இருக்கைகள் அனைத்திலும் மழைநீர் தொடர்ந்து அருவி போல கொட்டியதால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். குறிப்பாக அதிக அளவிற்கு பெண் பயணிகள் பயணித்த சூழலில் இது போன்று மழை நீரில் ஆடைகள் நனைந்தபடி சிரமத்திற்கு மத்தியில் அரசு பேருந்து பயணித்தனர்.
அரசு பேருந்துகளின் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்தான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்துதுறை கூறிய நிலையில் தொடர்ச்சியாக மதுரை மண்டல போக்குவரத்து துறையின் கீழ் பல்வேறு அரசு பேருந்துகள் பராமரிப்பு இன்றி செயல்படுவதற்கு சாட்சியாக மழைநீர் வடிந்த அரசு பேருந்து அமைந்தது.
0
0