சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்… மாநகராட்சி பில் கலெக்டர் மற்றும் உதவியாளர் கைது!!

Author: Babu Lakshmanan
17 May 2024, 1:43 pm

ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மதுரை மாநகராட்சி பில் கலெக்டர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மதுரை மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட கண்ணனேந்தல் விஜயலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியரான பரசுராமன். இவர் தனது மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை தனது மூத்த மகன் ஈஸ்வர கண்ணனுக்கு தானமாக வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, தனது மகனுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கான சொத்து வரி மாற்றம் செய்வதற்காக மதுரை மாநகராட்சி 6ஆவது வார்டு கண்ணனேந்தல் மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி விண்ணப்பித்த பின்பாக, சிக்கந்தர்சாவடி பகுதியைச் சேர்ந்தவரான பில் கலெக்டரான ஆறுமுகம் மற்றும் அவரது உதவியாளர் சுதாகர் ஆகிய இருவரும் இடத்தை நேரடியாக கள ஆய்வு செய்துள்ளனர்.

மேலும் படிக்க: செல்வப்பெருந்கைக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் கிடையாது ; காங்., எம்எல்ஏ EVKS இளங்கோவன் திடீர் ஆவேசம்..!!

பின்னர், சொத்து வரி மாற்றம் செய்வதற்காக பரசுராமனிடம் இருந்து பில்கலெக்டர் ஆறுமுகம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணமாக கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மூன்று நாட்களாக லஞ்சம் தொடர்பாக 20 ஆயிரம், 15ஆயிரம் என பேரம் பேசப்பட்ட நிலையில், இறுதியாக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கூறியுள்ளார்.

இதைடுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமன் பில் கலெக்டர் லஞ்சம் கேட்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் பரசுராமனிடம் இரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து, மாநகராட்சி பிரிவு அலுவலகத்திற்கு சென்ற பரசுராமன் அலுவலகத்திற்கு சென்று பில் கலெக்டர் ஆறுமுகத்திடம் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வழங்கியுள்ளார். அந்த பணத்தினை பெற்றுக்கொண்ட ஆறுமுகம் அவரது உதவியாளர் அற்புதம் (எ) சுதாகரிடம் வழங்கியுள்ளார். இதனை ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் குமரகுரு தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக சென்று பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, பில் கலெக்டர் ஆறுமுகம் மற்றும் உதவியாளர் சுதாகர் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி மாற்றம் செய்வதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட அதிகாரி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 356

    0

    0