உங்க கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க முடியாது : கெஜ்ரிவாலுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்!
Author: Udayachandran RadhaKrishnan28 May 2024, 2:18 pm
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து, இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த, வழக்கு விசாரணையின்போது, கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாள் ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கோடை விடுமுறையை குறிப்பிட்டு இந்த இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு குறிப்பிட்டு இருந்தது.
மேலும் ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் சரணடைய வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டது. இதனை அடுத்து கடந்த வாரம், உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை கெஜ்ரிவால் தரப்பு தாக்கல் செய்தது.
மேலும் படிக்க: 6 மாதமாக 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. அண்ணன் முறை உறவினரான 16 வயது சிறுவனின் கோரம்.. 3 பேர் அரங்கேற்றிய கொடூரம்!
அதில், தனது மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு இடைக்கால ஜமீனை மேலும் 7நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்றும் ஜூன் 9ஆம் தேதி சிறை அதிகாரிகளிடம் சரணடைவதாகவும் குறிப்பிட்டார்.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை விசாரித்த, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு கோரிக்கையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும், கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கோடை விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்புமாறும் கூறி கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு.