தலித் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு.. 5 வருடங்களில் குடும்பத்தையே கொலை செய்த கும்பல்.. ஷாக் சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan28 May 2024, 7:16 pm
கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் சாகர் பகுதியில் தலித் பெண்ணை விக்ரம் சிங் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இந்த வழக்கில் விக்ரம் சிங் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என விக்ரம் சிங் கும்பல் , பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தாரை அடித்து மிரட்டியுள்ளனர் என்று சாகர் பகுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, 15 வயதான சிறுவன் (2019இன் படி), ஆசாத் தாக்கூர், விஷால் தாக்கூர், புஷ்பேந்திர தாக்குர் மற்றும் சோட்டு ரைக்வார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து, இந்த வழக்கை வாபஸ் பெற சொல்லி விக்ரம் சிங் கும்பல் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தாரை தொடர்ந்து துன்புறுத்தி, மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த பெண்ணின் 18 வயதான சகோதரன் நிதின் அகிர்வாரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்தது.
இது தொடர்பாக 9 பேர் மீது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம் , கொலை வழக்கு பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விக்ரம் தாக்கூர், விஜய் தாக்கூர், ஆசாத் தாக்கூர், கோமல் தாக்கூர், லாலு கான், இஸ்லாம் கான், கோலு சோனி, நபீஸ் கான் மற்றும் வஹீத் கான் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ராஜேந்தர் அக்ரிவாரையும் ஒரு கும்பல் தாக்கியுள்ளது.
இதில், சிகிச்சை பலனின்றி பெண்ணின் உறவினர் உயிரிழந்தார். இதில், குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஆஷிக் குரேஷி, பப்லு பெனா, இஸ்ரேல் பெனா, ஃபஹீம் கான் மற்றும் தந்து குரேஷி ஆகிய 5 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என கூறப்படுகிறது.
இதனை அடுத்து, உயிரிழந்த உறவினர் உடலை பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலன்சில் ஏற்றி வந்துள்ளார். அப்போது நிகழ்ந்த விபத்தில், பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலன்சில் இருந்து கிழே விழுந்ததில் படுகாயமுற்று உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 கொலைகளும், ஒரு மர்மமான விபத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மரணமும் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.