பதவியேற்ற ஒரே நாளில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு : சுரேஷ் கோபியால் அப்செட்டில் பாஜக!
Author: Udayachandran RadhaKrishnan10 June 2024, 1:12 pm
ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது.
இதில் மத்திய அமைச்சராக நடிகரும், திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பியுமான சுரேஷ் கோபியும் பதவியேற்றுக்கொண்டார். கேரளாவில் முதன்முறையாக கால் பதிக்க காரணமாக இருந்தவர் சுரேஷ்கோபி.
இந்நிலையில், கேரளா மாநிலத்தின் திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றவே விரும்புகிறேன். அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. அமைச்சர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன்.
விரைவில் என்னை விடுவிப்பார்கள் என்று நினைக்கிறேன். திருச்சூர் தொகுதி மக்கள் என்னை நன்கு அறிவர். பாராளுமன்ற உறுப்பினராக நான் சிறப்பாக செயல்படுவேன். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். கட்சியே முடிவை எடுக்கட்டும் என்று தெரிவித்தார்.
கேரளா மாநிலத்தில் இருந்து தேர்வாகி இருக்கும் முதல் பா.ஜ.க. எம்.பி. என்ற பெருமையை சுரேஷ் கோபி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.