கஞ்சா வழக்கில் போதை தடுப்பு பிரிவு காவலர் கைது.. வேலியே பயிரை மேய்ந்த அவலம்.. மதுரையில் அதிர்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan14 June 2024, 10:59 am
மதுரை மாவட்டம் குமாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (69) இவர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுப்புராஜை பின் தொடர்ந்து காவல்துறையினர் அவர் கையில் கஞ்சாவைத்திருந்தபோது கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்து சுப்புராஜிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நீதிமன்ற வழக்கு கண்காணிப்பு தலைமை காவலராக பணிபுரியும் ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (50) என்பவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை சுப்புராஜ் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படை காவல்துறையினர் தலைமைக்காவலர் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை காவலர் இதுபோன்று பல்வேறு கஞ்சா வழக்கு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தாரா? வேறு எங்கும் கஞ்சாவை பதுக்கிவைத்துள்ளாரா? பாலமுருகனுடன் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தவும் தனிப்படை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கஞ்சா விற்பனையை தடுக்க மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமைக்காவலரே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.