கருணாநிதி புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன்? அது இயலாமை இல்லையா? அமைச்சருக்கு அதிமுக எம்எல்ஏ கேள்வி!
Author: Udayachandran RadhaKrishnan17 June 2024, 6:58 pm
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன்? அது இயலாமை இல்லையா? அதன் பெயர் வல்லமையா? இயலாமையைப் பற்றி பேசும் விடியா தி.மு.க அரசின் அமைச்சர் மனோதங்கராஜ் இதற்கு பதில் சொல்வாரா? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க-விற்கு பயம் வந்து விட்டது என கழக அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கழக அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அதிமேதாவதியாக தன்னைக் கருதிக் கொண்டு, பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருளாகி விட்டது என்று நினைக்குமாம்.
இதைப் போன்று வரலாறுகளை அறியாமல் வாய்க்கு வந்ததை கூறி தன்னை பெருமைப்படுத்தி கொள்ள நினைப்பதோடு விடியா தி.மு.க அரசின் முதலமைச்சரிடம் ஏதாவது சொல்லி நல்ல பெயரை எடுக்க வேண்டுமென்று பொய்யான முகத்துடன் அறிக்கை தர்பாரில் இயங்கும் வாய்ச்சொல்லில் வீரன் என்று நினைத்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுபவர் தான் விடியா தி.மு.க அரசின் பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் .
அவர் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கூறும் போது, தேர்தல் கமிஷன் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அப்படி இருக்கையில் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பு என்பது அவர்களது இயலாமையை காட்டுகிறது என்றும் எந்த சூழ்நிலையிலும் விக்கிரவாண்டி தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதாலேயே போட்டியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.
அவருக்கு வரலாறுகள் தெரியுமோ, தெரியாதோ என்று தெரியவில்லை. இல்லை வரலாற்றை மறைக்கிறாரோ, இதற்கு நான் விளக்கம் அளிக்க கடமைப் பட்டுள்ளேன்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலின் போது 04-05-2012 அன்று வெளியான முரசொலி நாளிதழில், மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்கள் அவரது இல்லத்தில் அளித்த பேட்டியின் போது, அ.தி.மு.க-வும் தேர்தல் ஆணையும் சேர்ந்து தான் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.
போட்டியிடுகின்ற எந்த எதிர்கட்சிக்கும் தேர்தல் ஆணையம் வாயிலாக நியாயம் கிடைக்காது என்றும் இதனால் புதுக்கோட்டை இடைத்தேர்தலை தி.மு.க கழகம் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார்கள்.
இதனடிப்படையில் அவர்கள் தேர்தலை புறக்கணித்தார்கள். இதற்கு பெயர் இயலாமை இல்லையா? அதற்கு பெயர் வல்லமையா? அப்படி இருக்கையில் அ.தி.மு.க-விற்கு தேர்தலில் நிற்பதற்கு இயலாமை என்று குறை கூறுவதற்கு உங்களுக்கு வெட்கம் இல்லையா? வரலாற்றை திரித்துப் பார்க்க முயல்கிறிர்களா? தமிழர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தான்.
தவறான விளக்கங்களை உங்கள் மனம் போன படி கருத்து கூறி விளக்க வேண்டாம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எங்கள் கட்சியின் முடிவுகளை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தெளிவுற விளக்கி உள்ளார்கள்.
நாங்கள் வெற்றிகளை பார்த்தது இல்லையா? தோல்வியை மட்டுமே கண்டவர்கள் நீங்கள். நடைபெறப் போகும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். கூட்டணியால் மட்டுமே வெற்றி பெறுகின்ற இயக்கமாக தி.மு.க மாறி வருகிறது.
வரும் 2026-ம் ஆண்டில் அ.தி.மு.க அமோக வெற்றிப் பெற்று மக்களின் பேராதரவோடு ஆட்சி அமைக்கும் என்பதை நீங்கள் நடைபெறுகின்ற தேர்தல் மூலம் காண்பீர்கள்.
மக்கள் என்றும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சித்தமிழரின் பக்கம் தான் உள்ளார்கள் என்பதை நாடறியும் என கழக அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் அறிக்கையில் கூறியுள்ளார்.