சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக தான் பார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்…. மாவட்ட ஆட்சியர் வேண்டா மாநகராட்சி குழுவுக்கு எச்சரிக்கை!
தமிழக அரசு புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதோடு 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இன்னும் 20 தினங்களுக்குள் புதுக்கோட்டை மாநகராட்சி செயல்பட தொடங்கும் என்று நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மாநகராட்சியோடு தங்களது ஊராட்சிகளை இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும், வரி உயரும் அபாயம் உள்ளது என்று கூறி பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் வேண்டாம் மாநகராட்சி என்ற 2 குழுவை அமைத்து அதில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து அதிருப்தி அடைந்த பொதுமக்கள் இன்று காலை 500 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து ஆட்சியர் அலுவலக வராண்டாவில் அமர்ந்தனர்.இதனை தொடர்ந்து இரண்டாம் மாநகராட்சி குழு மற்றும் 11 ஊராட்சி தலைவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களது ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க கூடாது என்ற கோரிக்கையை வைத்தனர்.அதற்கு பதில் அளித்து பேசிய ஆட்சியர் உங்களுடைய கருத்துக்களை ஏற்கனவே அரசுக்கு தெரியபடுத்தி விட்டோம். மீண்டும் இன்று உங்களுடைய கோரிக்கைகளை அரசிற்கு நாங்கள் தெரிவிக்கிறோம். மாநகராட்சியோடு ஊராட்சி இணைந்தால் 100 நாள் வேலைத்திட்டம் பறிபோகும் என்ற கருத்து தவறானது.
நகராட்சிக்கு என்று தனி வேலை திட்டம் உள்ளது.அதில் பயனாளிகளுக்கு பணி கொடுக்கப்படும். மாநகராட்சியோடு இணைத்தால் வேலை வாய்ப்புகள் வளரும் சூழ்நிலை ஏற்படும். எனவேதான் மாநகராட்சியோடு ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது. இருப்பினும் உங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை அரசுக்கு நாங்கள் எடுத்துரைக்கிறோம் என்று கூறியதோடு அதே நேரத்தில் இந்த விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.அரசியல் செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கினால் அது கண்டிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக தான் பார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் மெர்சி ரம்யா அவர்களிடம் உறுதி கூறினார்.
இதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து தாசில்தார் தலைமையில் அரசு அதிகாரிகள் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.