கேரளா சென்ற ஆம்னி பேருந்து சிறைப்பிடிப்பு.. பயணிகள் பரிதவிப்பு.. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அபராதம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2024, 1:33 pm

சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் கல்லடா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான குளிர்சாதன வசதி கொண்ட ஆம்னி பேருந்து இன்று காலை சுமார் 6 மணி அளவில் கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த கோவை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்துள்ளனர்.அப்போது அந்த பேருந்து அருணாச்சல் பிரதேசம் மாநில பதிவெண் கொண்டிருந்ததையடுத்து அப்பேருந்தினை சிறை பிடித்த அதிகாரிகள் சுமார் 30 பயணிகளுடன் பேருந்தை கோவை காந்திபுரத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் சுமார் 2 மணி நேரம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைத்த வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் பேருந்தை இயக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இதை அடுத்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கேரள மாநில அரசு பேருந்தை பிடித்தி அதில் ஏற்றிவிட்ட அதிகாரிகள் ஆம்னி பேருந்தை கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் ஆம்னி பேருந்து அனுமதி மீறல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அபராத தொகையை வசூலித்த பின்னரே பேருந்தை விடுவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஒரு மாத காலமாக இப்பிரச்சினை சென்று கொண்டுள்ள சூழலில் கல்லடா பேருந்து நிறுவன உரிமையாளர் தான் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்து அதன் அடிப்படையிலேயே வெளி மாநில பேருந்துகள் தமிழகத்திற்குள் இயக்குவதற்கு தடை விதிக்க கூடாது என்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினர் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை அமலில் இருக்கும் சூழலில் கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலர்களின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 263

    0

    0