திருப்பூருக்கு வந்த ஆந்திர ரயிலில் 7 கிலோ கஞ்சா : விசாரணையில் சிக்கிய பெண்.. பின்னணியில் கும்பல்!
Author: Udayachandran RadhaKrishnan27 June 2024, 6:49 pm
வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் வரக்கூடிய நபர்கள் ஓடிஸா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருட்களை கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்ததையடுத்து, திருப்பூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார், ரயில் நிலையம் அருகே ரயில் மூலம் வரக்கூடிய பயணிகளை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபர்களை பிடித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அமீர், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சபீர் பாஷா என்பதும், அவர்களிடம் இருந்த கைப்பையை சோதனை செய்ததில், சுமார் 7 கிலோ 600 கிராம் எடை கொண்ட கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து, மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அமீர் மற்றும் முருகேஸ்வரி இருவர் மீதும் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.