கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாயை பிரிந்த குட்டி யானை, உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த யானையின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், வனத் துறையினர் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு 8.45 மணியளவில் குட்டி யானை உயிரிழந்து உள்ளது. கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த மே மாதம் 30 ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது. இதனை வனத் துறையினர் ஐந்து நாட்கள் சிகிச்சை அளித்து வனபகுதிக்குள் விடுவித்தனர். இந்நிலையில் இந்த பெண் யானையுடன் இருந்த 3 மாத யானை குட்டி தாயிடம் இருந்து பிரிந்து வேறொரு யானை கூட்டத்துடன் சேர்ந்து காட்டுக்குள் சென்றது.
இதனிடையே மீண்டும் கூட்டத்தை விட்டு பிரிந்து தனியாக யானைகுட்டி சுற்றி திரிந்தது வந்த நிலையில் வனத் துறையினர் யானை குட்டியை மீட்டு தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத் துறையின் முயற்சி தோல்வி அடைந்ததால் கடந்த ஜூன் 9 ம் தேதி உதகை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு யானை குட்டியை கொண்டு சென்று பராமரித்து வந்தனர். இந்நிலையில் யானை குட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்து விட்டதாக வனத் துறையினர் தெரிவித்தனர். இன்று காலை சுமார் 9.30 மணியளவில் பிரேத பரிசோதனை நடைபெறும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.தாய் யானையை விட்டு பிரிந்து இருந்த 3 மாத யானை குட்டியை முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடைய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.