வேங்கைவயல் சம்பவம் போல அடுத்த அதிர்ச்சி.. மேல்நிலை தொட்டியில் கலந்தது என்ன? அதிகாரிகள் ஆய்வு!
Author: Udayachandran RadhaKrishnan4 July 2024, 7:25 pm
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கடம்பரஹள்ளி கிராமத்தில் 500 மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊருக்கு அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர் கேட்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொட்டி அருகே திருப்பதி என்பவர் தனியாக ஒரு அறையில் மாந்திரீக செய்வதாகவும் அந்த வழியாக செல்பவர்களை மிரட்டுவதாகவும் தெரிய வருகிறது.
அவர் இருக்கும் அறைக்கு தனியாக குடிநீர் இணைப்பு வழங்குமாறு கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து இன்று காலை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் திருப்பதி என்பவர் அடிக்கடி ஏறி இறங்கியதால் தண்ணீரில் ஏதாவது கலந்திருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சமடைந்து கம்பைநல்லூர் காவல்துறையினருக்கு புகார் தெரித்தனர்.
தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்த பின்னர் தொட்டியில் இருந்த அனைத்து தண்ணீரையும் வெளியேற்றினார்கள்.
அதன்பின் ஆய்வுக்காக தொட்டியில் இருந்த தண்ணியை கேன் மூலமாக எடுத்துச் சென்றனர். இதனை அடுத்து இந்த தொட்டியிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட கடம்பரஹள்ளி, வகுரப்பம்பட்டி, பெரியவுண்டம்பட்டி, பட்டகப்பட்டி கிராமத்தை சேர்ந்த, கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு தலை வலி, வயிறு வலி, மயக்கம் வருவது போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து ஆசிரியர்கள் அரசு மருத்துவமனைக்கு மாணவர்களை அழைத்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்திலே செவிலியர்களை வரவழைத்து 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.