ஆம்ஸ்டிராங் கொலை சிபிஐ விசாரணை தேவை.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம் ; மாயாவதி கருத்து!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2024, 1:29 pm

பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது.

கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று பேசினார். மேலும் அவர் பேசியதாவது, தலித் மக்களுக்கு நிறைய பொருளாதார உதவிகளை ஆம்ஸ்ட்ராங் செய்துள்ளார்.

தலித் மக்களின் வாழ்க்கை மேம்பட, பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தமிழக அரசுக்கு பகுஜன் சமாஜ் அழுத்தம் கொடுக்கும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தால் எங்கள் கட்சி மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறது.

தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட கூடாது. அமைதியான முறையில் கருத்துக்களை கூறுங்கள். தொண்டர்கள் வருத்தத்தோடு இருந்தாலும், அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் கொலையால் பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்திற்கு பகுஜன் சமாஜ் துணை நிற்கிறது. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.

இதன்பின்னர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்து மாயாவதி புறப்பட்டு சென்றார். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…