கோவையில் தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலங்கள்.. விசாரணையில் போதை கணவன் கைது.. பரபர வாக்குமூலம்!
Author: Udayachandran RadhaKrishnan8 July 2024, 5:09 pm
கோவை ஒண்டிபுதூர் அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரிணி (9), ஷிவானி (3) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
பெயிண்டர் வேலைக்கு செல்லும் தங்கராஜ் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் போதையில் வீட்டில் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். வீட்டுவேலைக்கு செல்லும் புஷ்பா குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை கணவர் தங்கராஜ், தனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதப்பதாகவும், சடலத்தை மீட்க அக்கம்பத்தினரை அழைத்துள்ளார்.
இது தொடர்பாக அண்டை வீட்டார் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கநல்லூர் போலீஸார் தொட்டியில் இருந்து மூவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர்.
தொடர்ந்து காலை நேரத்திலும் போதையில் தள்ளாடிய தங்கராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், நேற்று இரவு மனைவிக்கும் தனக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், தனது மூத்த மகள் ஹரிணியை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசியதாகவும், அதனைத்தொடர்ந்து மனைவி மற்றும் இளைய மகள் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தங்கராஜை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து மற்ற இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது மகள் இறந்த துக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதையில் தங்கராஜ், புஷ்பாவை அடிக்கடி தாக்கி, தகராறு செய்து வந்ததாகவும், தற்போது மூவரையும் கொலை செய்து விட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
கோவையில் தாய் மற்றும் இரு குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் சடலமாக வைக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் கொலையா? தற்கொலையா? என்பது தொடர்பாக விசாரணையை தீவிர்படுத்தி உள்ளனர்.